இந்தியாவின் முன்னனி பேட்மின்டன் வீராங்கனையான பி.வி. சிந்து, ஒலிம்பிக் போட்டிக்கான தேசிய பயிற்சி முகாமிலிருந்து வெளியேறி லண்டனுக்கு சென்றிருப்பது விளையாட்டு உலகினரிடையே திடீர் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஐதராபாத்திலிருந்து லண்டன் புறப்படும் முன்பு கோபிசந்த்தின் பயிற்சி மைய பயிற்சியாளர்களை தொடர்பு கொண்டு 8 முதல் 10 வாரங்களுக்கு இந்தியா திரும்பி வர மாட்டேன் என சிந்து கூறியுள்ளார். லண்டனில் பிரிட்டன் வீராங்கனைகளுடன் அவர் பயிற்சியில் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது விளையாட்டுத் திறனை, உடல் திடத்தை மேம்படுத்த பி.வி.சிந்து கடந்த வாரம் இங்கிலாந்துக்குச் சென்றுள்ளார். அங்குள்ள தனியார் மையத்தில் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பி.வி.சிந்து தேசிய பயிற்சி முகாமிலிருந்து வெளியேறியதற்கான காரணம் உறுதியாக தெரியாத நிலையில், குடும்ப பிரச்சனை பின்னணியில் இருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையான டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

தன்னைப் பற்றி பொய்யான செய்திகளை வெளியிட்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என பி.வி.சிந்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், “ஜிஎஸ்எஸ்ஐ (கேடரேட் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்) பயிற்சியின் தேவைக்கேற்ப எனது ஊட்டச்சத்து மற்றும் உடலின் திடத்தைச் சரி செய்ய சில நாட்களுக்கு முன்பு லண்டன் வந்தேன்.

எனது குடும்பத்தின் ஒப்புதலோடுதான் நான் இங்கு வந்திருக்கிறேன். இதுகுறித்து குடும்பத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. மேலும், எனது பயிற்சியாளர் கோபிசந்த் உடனோ அல்லது அகாடமியில் இருக்கும் பயிற்சி வசதிகளிலோ எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.

பொய்யான செய்திகளைப் பரப்பி வரும் குறிப்பிட்ட ஆங்கில தினசரியின் விளையாட்டுப் பிரிவு பத்திரிகையாளர், எழுதுவதற்கு முன் உண்மைகளை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அவர் இதை நிறுத்தவில்லையென்றால் அவருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்” என சிந்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க: டிசம்பர்-1 முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்க வேண்டும்- ஏஐசிடிஇ