மின்சார வாகன சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஓலா மின்சார ஸ்கூட்டரை நாட்டின் 75வது சுதந்திர தினமான இன்று (ஆகஸ்ட் 15) ஓலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஓலா நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் சுதந்திர தினமான இன்று (ஆகஸ்ட் 15) இந்திய சந்தையில் அறிமுகமானது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் S1 மற்றும் S1 புரோ (S1 Pro) செக்மெண்ட் வாகனங்கள் அறிமுகமாகி உள்ளன.

S1 வேரியண்ட் சிறப்புகள்:

S1 மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிமீ, மைலேஜ் ஒரு முழுமையான சார்ஜில் 121 கிமீ ஆகவும் உள்ளது. இதில் நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என இரு ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மாடலில் 0 முதல் 40 கிமீ வேகத்தை 3.6 நொடிகளில் அடையலாம்.

2.98 kWh திறனுள்ள பேட்டரி கொண்ட இந்த மாடலின் எடை 121 கிலோவாகும். வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதனுடைய பேட்டரி முழுமையாக சார்ஜ் அடைய 4.48 மணி நேரங்கள் தேவைப்படும். மேலும் 5 வண்ணங்களில் இந்த பைக்கை பெறலாம்.

S1 Pro வேரியண்ட் சிறப்புகள்:

S1 Pro மாடலின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115 கிமீ, மைலேஜ் ஒரு முழுமையான சார்ஜில் 181 கிமீ ஆகவும் உள்ளது. இதில் நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் என மூன்று ரைடிங் மோட்கள் கிடைக்கின்றன. இந்த மாடலில் 0 முதல் 40 கிமீ வேகத்தை 3 நொடிகளில் அடையலாம்.

3.97 kWh திறனுள்ள பேட்டரி கொண்ட இந்த மாடலின் எடை 125 கிலோவாகும். வீட்டு சார்ஜரை பயன்படுத்தினால் இதனுடைய பேட்டரி முழுமையாக சார்ஜ் அடைய 6.30 மணி நேரங்கள் தேவைப்படும். மேலும் 10 வண்ணங்களில் இந்த பைக்கை பெறலாம்.

ரிவர்ஸ் பார்க் அஸிஸ்ட் எனும் சிறப்பு இந்த வேரியண்டில் மட்டும் கிடைக்கிறது. இது தவிர ரிமோட் பூட் லாக்/அன்லாக், ஆன்போர்ட் நேவிகேஷன், ஜியோ ஃபென்சிங், மொபைல் போன் கால், மெசேஜ் அலர்ட், ஆண்டி தெஃப்ட் அலாரம் சிஸ்டம் போன்றவை இடம்பெற்றுள்ளன. இரண்டு ஹெல்மெட்டுகளை வைக்கும் அளவு பெரிய பூட் ஸ்பேசுடன் இந்த ஸ்கூட்டரில் உள்ளது.

இதில் S1 எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99,999, S1 புரோ எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,29,999 என உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களிலும் மானியம் அறிவிக்கப்பட்டிருப்பதால், இந்த வாகனத்தின் விலை ஒவ்வொரு மாநிலத்துக்கும் வித்தியாசப்படும். குஜராத்தில் S1 மாடல் ரூ.79,999, S1 புரோ ரூ.1,09,999 மற்றும் டெல்லியில் S1 மாடல் ரூ.85,099, S1 புரோ ரூ.1,10,149 என விற்கப்படும்.

மகாராஷ்டிராவில் மானியத்துக்கு பிறகு S1 மாடல் ரூ.89,999, S1 புரோ ரூ.1,24,999 ஆகவும், ராஜஸ்தானில் S1 ரூ.89,968, S1 புரோ 1,19,138 ரூபாய்க்கும் விற்கபடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதர மாநிலங்களில் ரூ.99,999 மற்றும் 1,29,999 என அறிவிக்கப்பட்டிருக்கிறது. EMI-யிலும் இந்த வாகனம் கிடைக்கிறது.

வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் இந்த வாகனம் டெலிவரி தொடங்கும். வீட்டுக்கே நேரடியாக டெலிவரி செய்யப்படும் எனவும் ஓலா அறிவித்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ரூ.499க்கு வாகனத்துக்கான முன்பதிவு நடந்தது.

முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் சுமார் ஒரு லட்சம் முன்பதிவுகள் நடந்துள்ளதாகவும், மேலும் ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் குவிந்து வருவதாகவும் ஓலா தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலை ஓசூரில் இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.

பழைய வாகனங்களை அகற்றும் கொள்கை 2021: பிரதமர் மோடி பெருமிதம்