சிபிஐயில் லஞ்சப் புகார் தொடர்பாக, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் (சிவிசி) விசாரணை அறிக்கைக்கு அலோக் குமார் வர்மா உச்ச நீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்தார். 

சிபிஐ இயக்குனர் அலோக் குமார் வர்மா, சிறப்பு சிபிஐ இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகார மோதல் ஏற்பட்டது. இதனால், இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, தற்காலிக சிபிஐ இயக்குநரை நியமித்தது.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும் சிவிசி முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிவிசி அறிக்கையில், ‘அலோக் வர்மா குறித்த விசாரணையின் சில கூறுகள் பாராட்டும் படியாக இல்லை’ என கூறப்பட்டிருந்தது. இது குறித்து அலோக் வர்மா தரப்பில் 19ம் தேதிக்குள் (இன்று) பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று ஆஜரான அலோக் வர்மா தரப்பில் வக்கீல் கோபால் சங்கர நாராயணன், பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரினார். 

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி, ‘‘ஏற்கனவே ஒதுக்கப்பட்டபடி, செவ்வாய் கிழமை நடக்கும் விசாரணையை ஒத்திவைக்க முடியாது. எனவே இன்று மாலை 4 மணிக்கும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, சீலிடப்பட்ட கவரில் அலோக் வர்மாவின் பதில் தாக்கல் செய்யப்பட்டது.  

செவ்வாய் அன்று  இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.