சென்னை தனியார் நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த 400 கிலோ தங்கத்தில் 103 கிலோ தங்கம் மாயமாகியுள்ளது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

தங்கத்தை இறக்குமதி செய்யும் சுரானா கார்பரேஷன் லிமிடெட் எனும் நிறுவனம் சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ளது. இந்த நிறுவனத்திற்கு இந்திய தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக கழகத்தின் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து சிபிஐ 2012 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. பின்னர் அந்த தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி 400.47 கிலோ தங்கத்தை சிபிஐ பறிமுதல் செய்தது.

அந்த தங்கத்தை அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு லாக்கரில் வைத்து சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்து விட்டனர். இந்த லாக்கருக்கான 72 சாவிகள் சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்து, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் முடித்து வைத்தனர்.

இந்நிலையில் தங்கத்தை இறக்குமதி செய்ய சுரானா கார்பரேஷன் வெளிநாட்டு வர்த்தக கொள்கை விதிகள் மீறப்பட்டுள்ளன என கூறி அதற்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீது சிலர் வழக்குப் பதிவு செய்தனர். அந்த வழக்கிற்கு இந்த தங்கத்தை பறிமுதல் செய்ததாக கணக்கு காட்டி முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் அனுமதி பெற்றனர்.

இது போல் சிபிஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் வெளிநாட்டு வர்த்தகத்துறை இயக்குநர் ஜெனரலிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து சிறப்பு நீதிமன்றத்திலும் உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே இந்த தங்கத்தை இறக்குமதி செய்த சுரானா நிறுவனம் பல வங்கிகளில் ரூ 1,169 கோடி கடன் பெற்று அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தி நிர்வகிக்க வங்கிகள் சார்பில் சிறப்பு அதிகாரியாக ராமசுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த அதிகாரி இந்த தங்கத்தை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 72 சாவிகளை பயன்படுத்தி அந்த லாக்கரை திறந்தனர்.

அப்போது 400.47 கிலோ தங்கத்தில் 103 கிலோ தங்கம் குறைவாக இருந்தது. இதனையடுத்து தங்கம் மாயமானது குறித்து வங்கிகளின் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம், சிபிசிஐடி போலீசில் புகார் செய்யவேண்டும். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் கண்காணிப்பாளர் பதவிக்கு குறையாத அதிகாரி புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இவரது புலன் விசாரணைக்கு, சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்குப்பதிவு செய்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

மேற்குவங்கத்தில் பாஜக தனது நாடகத்தை தொடங்கியுள்ளது- முதல்வர் மம்தா பானர்ஜி