மேற்குவங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது, ஜே.பி.நட்டா பாதுகாப்பு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது திட்டமிட்ட நாடகம் என முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தளுக்கான பிரச்சாரத்தை பாஜக இப்போதே துவங்கிவிட்டது. அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்ந்து தற்போது பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்க்கியா உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதிக்கு ஜே.பி.நட்டா சென்றபோது, அவரது கார் அணிவகுப்பு மீது கற்களை வீசி தாக்கியதில் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு ஜே.பி.நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து, மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரப்போவதாகவும் எச்சரித்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள முதல்வரும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பொதுமக்களின் கவனத்தை பெறும் வகையில், பாஜகவால் அரங்கேற்றப்பட்ட நாடகமே இந்த தாக்குதல் சம்பவம் என சாடியுள்ளார்.

அனைத்து மத்திய படைகளையும் தனது வசம் வைத்திருக்கும் பாஜகவால், தனது கட்சித் தலைவரை மேற்குவங்க சுற்றுப் பயணத்தின்போது பாதுகாக்க முடியவில்லையா? மத்திய பாதுகாப்பு படையினர் இருக்கும் போது, திட்டமிட்டு தாக்குதல் நடத்த முடியுமா.. என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

மேற்கு வங்க தலைமை செயலர், டிஜிபி நேரில் ஆஜராக மத்திய அரசு சம்மன்