விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக சுமார் 21 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை நோக்கி 180 கிலோமீட்டர் மாபெரும் பேரணியை நடத்தி வருகின்றனர்.

மத்திய பாஜக அரசு புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி, நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுக் கடந்த இரண்டு மாநிலங்களுக்கு மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மகாராஷ்டிராவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ளும் மாபெரும் பேரணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுமார் 21 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் ஒன்று கூடினர்.

அங்கிருந்து அவர்கள் தற்போது 180 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தலைநகர் மும்பையை நோக்கி பேரணியாக நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இரு நகரங்களையும் இணைக்கும் சாலையில், ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடல் அலை போல சாரை சாரையாக செல்லும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த பேரணி மும்பையை சென்றடைந்ததும், நாளை மீண்டும் மும்பையின் ஆசாத் மைதானத்தில் மற்றொரு பேரணியை நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பேரணியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் விவசாய சட்டங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். மத்திய அரசு விவசாயிகளின் பொறுமையைச் சோதிக்கக் கூடாது,

தலைநகர் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடும் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளத் தவறினால் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

இரு நாட்களில், குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணி நடத்துவதில் விவசாயிகள் மிகவும் உறுதியாக உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், மகாராஷ்டிராவில் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ள இந்தப் பேரணி மத்திய அரசுக்கு அழுத்தத்தை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியால், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி உறுதி- விவசாயிகள்