சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் 2021 மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு, ஜூலை 15 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிக்குச் செல்லாமல், காணொலி மூலமே பாடங்களைக் கற்றுக்கொண்டு வருகின்றனர். கடந்த மாதம் அக்டோபர் 15 ஆம் தேதிக்குப்பின் சில மாநிலங்களில் மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன.

இதனால் மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்க, பாடத் திட்டத்தில் 30% வரை குறைத்து, பொதுத் தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்தது. மேலும், சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களிடம் மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி ஆசிரியர்களுடனும் அமைச்சர் பொக்ரியால் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 10, 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடத்தப்படாது. எழுத்து முறையிலேயே தேர்வு நடத்தப்படும். 30% குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 31) மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்ட அறிவிப்பில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், ஜூலை 15 ஆம் தேதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் 70% பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படும். மார்ச் 1, 2021 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு ஆகியவற்றின் நடைமுறை / திட்டம் / உள் மதிப்பீட்டை நடத்த பள்ளிகளுக்கு அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி நியமனம்