2008 ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரரான தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யும் என நினைத்து ஏமாற்றமடைந்த சம்பவத்தையும், தன்னை புறக்கணித்த வலியையும் 13 ஆண்டுகள் கழித்து தற்போது பகிர்ந்துள்ளார் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்.
தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் 2004இல் அறிமுகம் ஆனார். டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் இரண்டிலும் தன் 18வது வயதில் அடி எடுத்து வைத்தார். ஆனால், அணியில் இரண்டாம் கட்ட விக்கெட் கீப்பராக மாறினார். காரணம் அப்போது, அணியின் முதன்மை விக்கெட் கீப்பரான தோனியின், அதிரடி பேட்டிங் மற்றும் மேட்ச் வின்னர் என்ற தகுதிக்கு முன் வேறு எந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் வர முடியவில்லை.
ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு தொடங்கிய போது, எட்டு நகரங்களை முன் வைத்து அணிகள் உருவாக்கப்பட்டது. இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அவர்களது சொந்த மண்ணின் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்தனர். அதன்படி சச்சின் மும்பை அணிக்கும், கங்குலி கொல்கத்தா அணிக்கும், சேவாக் டெல்லி அணிக்கும், டிராவிட் பெங்களூரு அணிக்கும் தலைமையேற்று விளையாடினர். சென்னை அணிக்காக ராஞ்சியை சேர்ந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
தோனி தேர்வு செய்யப்பட்டது குறித்து, தனது அனுபவங்களை பகிர்ந்துள்ள தினேஷ் கார்த்திக், “2008 ஐபிஎல் ஏலம் நடைபெறும் போது நான் ஆஸ்திரேலியாவில் இருந்தேன். அப்போது இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருந்த நான் தமிழ்நாட்டில் பிரபலமாக இருந்தேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னை தேர்வு செய்வார்கள் என்று உறுதியாக இருந்தேன். எனக்கு இருந்த சந்தேகம் அணிக்கு நான் கேப்டனா? இல்லையா? என்பது தான். அது தான் எனது சிந்தனையில் இருந்த ஒன்று.
ஆனால் தோனியை அவர்கள் 1.5 மில்லியனுக்கு ஏலம் எடுக்கையில், அவர் என் அருகில் தான் அமர்ந்து இருந்தார். அவர் தன்னை தான் அவர்கள் தேர்வு செய்யப் போகிறார்கள் என என்னிடம் சொல்லவே இல்லை. அவருக்கு அது தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அது என் இதயத்தில் ஏற்பட்ட பெரிய காயம். அவர்கள் என்னை பின்னர் தேர்வு செய்வார்கள் என நான் நினைத்தேன். 13 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று கூறிய தினேஷ் கார்த்திக், தற்போதும் சிஎஸ்கே அணியின் அழைப்புக்காக காத்திருப்பதாக கூறினார்”.
ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்தி இதுவரை டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல் லேஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் லயன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் உள்ளிட்ட 6 அணிகளுக்காக விளையாடி உள்ளார்.