கொரோனா வைரசால் 3 மாதங்களில் 3 கோடி மக்கள் பட்டினியால் இறக்க வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் இயக்குனர் டேவிட் பீஸ்லே எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோயின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக, அதாவது, 265 மில்லியனாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய டேவிட் பீஸ்லே, இரண்டாம் உலகப் போருக்குப் பின், 2020ஆம் ஆண்டில் மிகப்பெரிய மனித உரிமை பிரச்சினை ஏற்படக்கூடும். சிரியா, ஏமன் போன்ற பல நாடுகளில் நடந்துவரும் போர், ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகளின் பெருக்கம், அடிக்கடி நேரும் இயற்கை பேரிடர்கள் மற்றும் லெபனான், காங்கோ சூடான், எத்தியோப்பியா போன்ற நாடுகளில் நிலவும் பொருளாதாரப் பிரச்சினை ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கும்.

உலகில் 13.5 கோடி பேருக்கு உணவு கிடைப்பதே பெரிய திண்டாட்டமாக இருக்கும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலால் 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் இன்னும் 13 கோடி பேர் பட்டினி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றார்.

2019ஆம் ஆண்டு நிலவரப்படி, காங்கோ, ஆப்கானிஸ்தான், வெனிசுலா, எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, சூடான், நைஜீரியா, ஹைதி ஆகிய 10 நாடுகளில், ஒவ்வொன்றிலும் சுமார் 10 லட்சம் பேர் ஏற்கெனவே உணவுக்கு உத்திரவாதம் இல்லாதவர்கள். நிலைமை மிக மோசமானால் 36 நாடுகளில் பஞ்சம் ஏற்பட்டு, 3 மாதங்களுக்குள் 3 கோடி பேரும் பட்டினியால் இறக்க நேரிடும்.

மேலும் ஊரடங்கு உத்தரவு, பொருளாதார வீழ்ச்சி ஆகியவை உழைக்கும் ஏழை மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். எனவே கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இறப்பவர்களைக் காட்டிலும் கொரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையால் பட்டினியால் இறப்பவர்கள் அதிகரிக்கக்கூடும் என்று டேவிட் பீஸ்லே எச்சரித்துள்ளார்.

இந்தியாவில் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய உணவுக் கழகத்திலிருந்து அபரிமிதமாக, உபரியாக இருக்கும் அரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து எத்தனால் தயாரிக்க பயன்படுத்தலாம் என முடிவு எடுத்துள்ளது. இதுபோன்று ஏற்றுமதி செய்யப்பட்டால், இந்தியாவிலும் உணவு பஞ்சம் கலவரமாகமாறும். மேலும் பசி, பட்டினியால் பல லட்சக்கணக்கான உயிர்களை இழக்கநேரிடும் என்பதே நிதர்சனம்.

மேலும் வாசிக்க: ஏழைகள் பசியால் உயிரிழக்க., சானிடைசர் தயாரிக்க அரிசி ஏற்றுமதி- ராகுல் காந்தி கண்டனம்