மாட்டுச்சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது என்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட மணிப்பூர் பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இருவரையும் பாஜக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது.
இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்றால் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூர் மாநில பாஜக தலைவர் திக்கேந்திர சிங் கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த 13 ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பிற்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
இதேபோல் உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் கொரோனா தொற்று பாதித்து பாஜக தலைவர்கள் பலரும் உயிரிழந்துவரும் நிலையில், பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட பல பாஜகவினர் கோமியம் குடிப்பதால் கொரோனா வரவில்லை என கூறிவருகின்றனர்.
கொரோனாவுக்கு மாட்டு சாணம் தெரபி: பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்தில் நிகழும் அவலம்
இந்நிலையில், மணிப்பூர் பாஜக தலைவர் கொரோனா தொற்றால் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்து, பத்திரிகையாளர் கிஷோர்சந்தர வாங்கே மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரேண்ட்ரோ லேசாம்பன் ஆகியோர் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்தனர்.
அதில், “சந்தியடையுங்கள் ஜி, மாட்டுச் சாணமும் கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது. அறிவியலும் அடிப்படை அறிவுமே கொரோனாவை குணப்படுத்தும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக மணிப்பூர் மாநில பாஜக சார்பில் அம்மாநில பாஜக துணைத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் காவல்துறையில் புகார் ஒன்றை அளித்தனர். அதில், கொரோனோவால் உயிரிழந்த மாநில பாஜக தலைவர் திக்கேந்திர சிங்கை இருவரும் அவமானப்படுத்தும் விதமாக சமூக வலைதத்ளங்களில் பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த புகாரைத் தொடர்ந்து, மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோர்சந்தர வாங்கே மற்றும் சமூக செயற்பாட்டாளர் எரேண்ட்ரோ லேசாம்பன் இருவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது அம்மாநில பாஜக அரசு.
பொதுவாக தேசிய பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீதே பதியப்பட வேண்டும். ஆனால் மாட்டுச் சாணமும் கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது என்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இருவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பி போஸ்டர் ஒட்டிய விவகாரம்; 25 பேர் அதிரடி கைது