உயர் ஜாதியினரின் தடுத்ததை மீறி உத்தரப் பிரதேசத்தின் கோயிலில் வழிபட்ட 17 வயது தலித் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அம்ரோஹா மாவட்டம் தும்காரா கிராமத்தை சேர்ந்த ஓம் பிரகாஷ் ஜாதவ் என்பவரின் மகன் விகாஸ் குமார் ஜாத்தவ். ஏழை விவசாயியான ஓம் பிரகாஷ் ஜாதவ் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் அந்த கிராமத்தின் வெளிப்புறப் பகுதியில் வசிக்கின்றனர்.

இவர்களுக்கு கிராமத்தின் மையப்பகுதியில் வசிக்கும் உயர் ஜாதியினர் கட்டிய சிவன் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுத்து, கோவிலுக்குள் நீ போகக் கூடாது என்று உயர் ஜாதியைச் சேர்ந்த சிலர் எதிர்த்துள்ளனர். அதை மீறி விகாஸ் குமார் இக்கோயிலில் கடந்த 1 ஆம் தேதி வழிபட்டதைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு படுத்திருந்த விகாஸ் குமாரை அவரது வீட்டில் ஹோராம் மற்றும் 3 பேர் சேர்ந்த கும்பல் தாக்கியுள்ளது. பிறகு ஹோராம் தன்னிடம் இருந்து துப்பாக்கியால் தனது மகனைச் சுட்டுக் கொன்றதாக ஓம் பிரகாஷ் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க: கட்டணம் செலுத்தாததால் 80 வயது முதியவரை கட்டிப்போட்ட தனியார் மருத்துவமனை

இதுகுறித்து, விகாஸ் குமார் தந்தை ஓம் பிரகாஷ் ஜாதவ் கூறுகையில், “கோயிலுக்குச் சென்ற தனது மகனை அங்கு வாழும் உயர் சமூகத்து இளைஞரான ஹோராம் சவுகான் தடுத்து நிறுத்தியுள்ளார். இதைப் பொருட்படுத்தாத விகாஸ் குமார் கோயிலில் நுழைந்து வழிபட்டுவிட்டு, வெளியில் வந்த விகாஸை ஹோராமுடன் சேர்ந்து மேலும் சில உயர் சமூகத்தினர் தாக்கியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் ஓம் பிரகாஷ் புகார் அளித்தும் பதிவாகவில்லை.

நான் முதலில் அளித்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் நான் மகனை இழந்திருக்க மாட்டேன். இதுபோல், அக்கோயிலுக்கு செல்லும் எங்கள் சமுதாயத்தினரை தாக்கூர்கள் மறிப்பது முதன் முறையல்ல” என புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து காவல்நிலைய ஆய்வாளரான நீரஜ் குமார் கூறும்போது, “முதற்கட்ட விசாரணையில், கோயில் நுழைவு மற்றும் வன்கொடுமை ஆகியதால் இந்த மோதல் ஏற்பட்டதாக ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. இதன் மீது நான்கு குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்வோம்” எனத் தெரிவித்தார். இதனிடையே, விகாஸ் குமாரின் வழக்கில் கொலை மற்றும் வன்கொடுமைத் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளில் ஹோராம் உள்ளிட்ட நால்வர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளது.