கொரோனா தடுப்பூசிக்கான மருந்தை ரஷ்யாவில் உள்ள ‘காமேலி இன்ஸ்டியூட் ஆப் எபிடெமியோலஜி மற்றும் மைக்ரோ பயாலஜி’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 17 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் செச்செனோவ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஜூன் 18ம் தேதி இப்பல்கலைக்கழகத்தில் தடுப்பூசி பரிசோதனையின் முதல் கட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து, இரண்டாவது கட்ட பரிசோதனையாக, ஜூன் 23ம் தேதி தடுப்பூசி வழங்கப்பட்டது.

இதன் முடிவில், கொரோனாவுக்கான தடுப்பு ஊசியைக் கண்டுபிடித்து, மனிதர்களுக்கு செலுத்தி முதற்கட்டமாக வெற்றி கண்டுள்ளதாக, செச்செனோவ் பல்கலைக்கழகம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

இதுகுறித்து செச்செனோவ் பல்கலைக்கழக மையத்தின் தலைவரும், தலைமை ஆராய்ச்சியாளருமான எலெனா ஸ்மோல்யார்ச்சுக் கூறுகையில், தன்னார்வலர்கள் மீதான தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஆய்வு டேட்டாக்களை வைத்து பார்த்தால், தடுப்பூசி பலன் தந்துள்ளதாகவும், மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை இது நிரூபித்தது என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம். தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது, ஆன்டிபாடிகள் உருவாக்கப்படுகின்றன. அது நம்மை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன. ஜூலை இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சுமார் 20 கோடி தடுப்பூசி மருந்தை தயாரிக்க ரஷியா திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3 கோடி தடுப்பூசி தயாரிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாகவும், அத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 17 கோடி கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: கொரோனா தடுப்பூசி மனித பரிசோதனை.. சர்ச்சையாக்கிய பாஜக சுகாதாரத்துறை அமைச்சர்