சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா உடல்நலக்குறைவால் இன்று (ஜனவரி 19) அதிகாலை காலமானார்.

புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா (வயது 93), சென்னை மருத்துவக் கல்லூரியில் 1949 ஆம் ஆண்டு மருத்துவர் பட்டமும், 1955 ஆம் ஆண்டில் எம்.டி. பட்டமும் பெற்றார்.

அடையாறில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் மருத்துவராக தனது பணியை துவங்கினார். ஏழை எளிய மக்களுக்கும் புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். 20 ஆண்டுகளாக புற்றுநோய் மையத் தலைவராக பணியாற்றியவர். தன்னலமற்ற மருத்துவ சேவைகள் மூலம் மருத்துவத் துறைக்கும், மருத்துவர்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்தவர்.

அவர் தனது தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்மபூஷண், பத்மவிபூஷண், நாயுடம்மா நினைவு விருது, அவ்வையார் விருது, அன்னை தெரசா விருது உட்பட ஏராளமான பல விருதுகளை பெற்றுள்ளார். விருதுகள் மூலம் கிடைத்த தொகை முழுவதையும் புற்றுநோய் மருத்துவமனைக்கே செலவிட்டவர்.

மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் சாந்தா. டாக்டர் முத்துலட்சுமிரெட்டியால் புற்றுநோய் மருத்துவ சேவைக்கு அழைத்து வரப்பட்டவர் மருத்துவர் சாந்தா என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் சாந்தா, சிகிச்சை பலனின்றி இன்று (ஜனவரி 19) அதிகாலை உயிரிழந்தார்.

இந்நிலையில் மருத்துவர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாக இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர் சாந்தாவின் உடலுக்கு மருத்துவர்களும், மருத்துவமனை ஊழியர்களும், பொதுமக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று மாலை 5 மணிக்கு பெசன்ட்நகர் மின்மயானத்தில், மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

3 நாட்களில் 3.8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி; 580 பேருக்கு பக்க விளைவுகள்: மத்திய சுகாதாரத்துறை