5 ஆண்டுகள் சம்பளம் இல்லாமல் கட்டாய விடுமுறையா அல்லது பணிநீக்கமா.. என ஏர் இந்தியா ஊழியர்கள் கொந்தளிக்கும் நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை விமானப் போக்குவரத்துச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா ரூ.60,000 கோடிக்கு மேல் கடனில் உள்ளதாக மத்திய பாஜக அரசு கூறியுள்ளது. இதற்கு கரணம் இந்திய விமானச் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியாலும், விமான எரிபொருள் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளாலும் கடந்த பல ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா தவித்து வருவதாக பாஜக அரசு கூறிவருகிறது.

இதனால் தனது ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூட கொடுக்க முடியாமல் தவித்து வரும் ஏர் இந்தியா, சம்பளக் குறைப்பு, பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. கடன் சுமையைக் காரணம் காட்டி, இந்நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் பாஜக மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக ஏர் இந்தியாவின் பங்குகளை தனியாருக்கு விற்பது நிலுவையில் உள்ளது.

மேலும் வாசிக்க: கொரோனா தடுப்பூசி மனித பரிசோதனை.. சர்ச்சையாக்கிய பாஜக சுகாதாரத்துறை அமைச்சர்

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளவும், நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகத் தனது ஊழியர்களை 5 ஆண்டுகளுக்குச் சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காகத் திறன், உடல்நலம், மிகையான ஊழியர்கள் ஆகிய அடிப்படையில் யாரையெல்லாம் விடுப்பில் அனுப்பலாம் என ஏர் இந்தியா நிர்வாகம் ஆய்வு செய்து வருகிறது.

ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு அதன் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏர் இந்தியா தனியார் மயமாதல் முடிவால், ஏற்கெனவே கவலையில் ஆழ்ந்துள்ள ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊழியர்களை சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்புவதற்கான அதிகாரம் ஏர் இந்தியா தலைவரும், நிர்வாக இயக்குநருமான ராஜிவ் பன்சாலுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை அனுப்பிவைக்கப்படுவார்கள். அதற்கு மேல் 5 ஆண்டுகளாகவும் நீட்டிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது, பல்வேறு தரப்புகளில் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹர்தீப் சிங் புரி அளித்துள்ள விளக்கத்தில், “இப்போதைய காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.600 கோடி நிதியுதவி வழங்கினால் மட்டும் போதாது. அதை வைத்துக்கொண்டு நிறுவனத்தை நடத்த இயலாது. செலவுகளைக் குறைக்க ஏதேனும் நடவடிக்கையை மேற்கொண்டுதான் ஆகவேண்டும். அதுதான் இப்போது நடந்திருக்கிறது. இப்போதைய நெருக்கடியான காலத்தில் அரசிடமும் ஏர் இந்தியா பெரிய உதவியைப் பெற இயலாது” என்று கூறியுள்ளது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.