அதிவேக தகவல் தொடர்பு செயற்கைகோளான, ‘ஜிசாட் -7ஏ செயற்கைகோளை ‘ஜி.எஸ்.எல்.வி – எப் 11 ராக்கெட்’ உதவியுடன் இஸ்ரோ நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
 
இதன் மூலம் 35 நாளில் 3வது ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்தி ‘இஸ்ரோ’ சாதனை படைத்துள்ளது. விவசாய மேம்பாடு, புவிகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உதவிடும் வகையில் செயற்கைகோள்களை தயார் செய்து அதை ‘பி.எஸ்.எல்.வி’ மற்றும் ‘ஜி.எஸ்.எல்.வி’ ராக்கெட் உதவியுடன் ‘இஸ்ரோ’ தொடர்ந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி வருகிறது.
 
முன்னதாக, கடந்த 2013ம் ஆண்டு ‘ஜிசாட் -7’ என்ற செயற்கைகோளை கடற்படையின் பயன்பாட்டிற்காக தயார் செய்து, ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்தியது.
 
அடுத்து, விமானப் படைக்கு உதவிடும் வகையில் 2,250 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்- 7ஏ’ தகவல் தொடர்பு செயற்கைகோளை ‘இஸ்ரோ’ தயார் செய்து விண்ணில் ஏவ தயாரானது. இந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான 26 மணி நேர கவுன்ட்டவுன் முடிந்ததையடுத்து, ‘ஜி.எஸ்.எல்.வி-எப் 11 ராக்கெட்’ உதவியுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள, 2வது ஏவுதளத்தில் இருந்து சரியாக நேற்று மாலை 4.10 மணிக்கு, ஜிசாட் -7ஏ செயற்கைகோளை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
 
பூமியில் இருந்து புறப்பட்ட 19 நிமிடம் 15 வினாடிகளில் திட்டமிட்டபடி செயற்கைகோள் அதன் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
 
2,250 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-7ஏ செயற்கைகோள்’ இந்தியாவின் 35வது தகவல் தொடர்பு செயற்கைகோளாகும்.
 
இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ‘கிரையோஜினிக் இன்ஜின்’ பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
இதன் முலம் பாதுகாப்பு துறைக்கு தேவையான தகவல் தொடர்புகளை பெற முடியும். ஒரு விமானத்தில் உள்ள விமானி மற்றொரு விமானத்தில் உள்ள விமானியிடம் தகவல்களை துல்லியமாக பரிமாறிக்கொள்ள முடியும்.
 
இந்த செயற்கைகோளின் ஆயுட்காலம் 8 ஆண்டுகளாகும். ஜி.எஸ்.எல்.வி எப்-11 ராக்கெட்டானது, ‘ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்’ வரிசையில், 13வது ராக்கெட்டாகும். இது இந்த ஆண்டில் ஏவப்பட்ட 7வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து, ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் சக விஞ்ஞானிகளுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது: 35 நாட்களில் 3வது ராக்கெட்டை வெற்றிகரமாக ‘இஸ்ரோ’ விண்ணில் செலுத்தி உள்ளது. ‘ஜிசாட் 7ஏ செயற்கைகோள்’ வெற்றிகரமாகவும், பாதுகாப்பாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
 
புயல் காலங்களில் சவாலாக இருந்த பணியின் போது காலநிலை குறித்து அறியும் எங்கள் அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டதால் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவ உதவியாக இருந்தது.
 
இந்த வெற்றி ‘இஸ்ரோ’ குழுவிற்கே சேரும். இந்த வருடத்தில் விண்ணில் ஏவப்படும் கடைசி ராக்கெட் இதுவாகும். புவிவட்ட பாதையில் செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்ட உடன் செயற்கைகோளின் சோலார் தகடுகள் உடனடியாக பிரிந்து சில நிமிடங்களில் செயல்பட தொடங்கியது.
 
இந்த வருடம் இஸ்ரோவின் 17 திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அடுத்த வருடம் சந்திராயன் 2 உட்பட 32 திட்டங்களை (மிஷன்) செயல்படுத்த உள்ளோம்.
இவ்வாறு கூறினார்.