DRDO தயாரித்த 2-DG கொரோனா எதிர்ப்பு மருந்தை அவசர பயன்பாட்டுக்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதலை அளித்திருந்த நிலையில், இந்த மருந்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து நிவாரணம் அளிப்பதற்காக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஆய்வகமான இன்ஸ்ட்டியூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைட் சயின்ஸ் (ஐஎன்எம்ஏஎஸ்) மற்றும் டாக்டர் ரெட்டிஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-DG) என்ற கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கியது.
2-DG என்ற இந்த மருந்தின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ஒப்புதல் வழங்கியது. டிஆர்டிஓ எனப்படும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள 2-DG கொரோனா எதிர்ப்பு மருந்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இணைந்து அறிமுகப்படுத்தினர்.
இந்நிலையில் 2-DG மருந்தை பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ளது. அதல்,
“மிதமான மற்றும் தீவிரமான கொரோனா நோயாளிகளுக்கு இந்தமருந்தை அதிகபட்சம் 10 நாட்கள் வரை டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டும்.
கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு, இதய நோய், சுவாச பிரச்சினை, கல்லீரல், சிறுநீரக கோளாறு உடையவர்களுக்கு இந்த மருந்தை தந்து பரிசோதிக்கவில்லை. எனவே இவர்களுக்கு இந்த மருந்தை பரிந்துரைக்கிறபோது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், 18 வயதுக்குட்பட்ட நோயாளிகளுக்கும் இந்த மருந்தை தரக்கூடாது.
மருந்தைப் பெற சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகம், ஐதராபாத் டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீசை அணுக வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
DRDO தயாரித்த 2-DG கொரோனா எதிர்ப்பு மருந்து; முதற்கட்டமாக 10000 பாக்கெட்டுகள் அறிமுகம்