மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற, மோடி ஆட்சிக் காலம் முடியும் வரை போராடத்தை தொடரவும் தயார் என்று விவசாய சங்கங்கள் எச்சரித்துள்ளனர்.

மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் 20 நாட்களைக் கடந்து விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் டெல்லியை நோக்கி பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்து கொண்டே இருக்கின்றனர்.

மத்திய அரசும் பேச்சுவார்த்தைகளை நடத்தி, விவசாய சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வருவதாக கூறியது. ஆனால் தங்களுக்கு தேவை, புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாக வேண்டும் என்பது மட்டுமே என்பதில் போராடும் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.

இது தொடர்பாக விவசாய சங்கத்தின் தலைவர் சத்னம் சிங் சஹானி கூறியதாவது, “நாங்கள் டெல்லிக்கு வருவதற்கு முன்னர் வீடுகளில் முடங்கிக் கிடக்கவில்லை. தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தினோம்.. ரயில்களை மறித்து போராடினோம். எங்களது போராட்டத்தை குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள்.

நாங்கள் டெல்லிக்கு வரும்போதே 6 மாதங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டுதான் வந்திருக்கிறோம். 6 மாதங்களுக்குப் பின்னரும் போராட்டம் நீடித்தாலும் எங்களுக்கான பொருட்கள் தொடர்ந்து வந்து சேரும்.

தேவைப்பட்டால் பிரதமர் மோடியின் ஆட்சிக் காலம் முழுவதுமே 2024-ம் ஆண்டு வரையும் போராட்டம் நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அரசாங்கத்துடன் இணைந்து இந்த போராட்டத்தை சீர்குலைக்கும் சக்திகளை நாங்கள் நன்றாகவே உணர்ந்தும் அறிந்தும் வைத்திருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

எங்களது போராட்டங்களில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஆதரவு தெரிவித்துவிட்டுப் போகலாம். எங்களது விவசாயிகள் உற்சாகம் குறையாமல் இருந்து வருகின்றனர். வேளாண் சட்டங்களை முழுவதுமாக திரும்பப் பெரும் வரை எங்களது போராட்டம் தொடரவே செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.

தேவைப்பட்டால் தனது ஆன்மாவையும் விற்பார் கெஜ்ரிவால்; பஞ்சாப் முதல்வர் ஆவேசம்