கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளானது பாஜகவுக்கு இம்மாநிலத்தில் இடம் இல்லை என்பதை தெளிவாக நிரூபித்திருக்கிறது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 941 கிராம ஊராட்சிகள், 152 வட்டார பஞ்சாயத்து, 86 நகராட்சிகள், 6 மாநகராட்சிகள் மற்றும் 14 மாவட்ட ஊராட்சிகள் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி, 514 கிராம ஊராட்சிகள், 108 வட்டார பஞ்சாயத்துகள், 35 நகராட்சிகள், 10 மாவட்ட ஊராட்சிகள் மற்றும் 5 மாநகராட்சிகளை கைப்பற்றியுள்ளது.
மாநிலத்தில் ஆளும் இடதுசாரிக் கூட்டணியின் வெற்றி குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “இந்த வெற்றி கேரள மக்களுடையது. கேரளத்தையும், அரசின் சாதனைகளையும் அழிக்க முயன்றவர்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்துள்ளார்கள். மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் ஆளும் அரசைச் சிதைக்க முயன்றவர்களின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது.
கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் இடதுமுன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
உள்ளாட்சித் தேர்தலில் இடதுமுன்னணிக்கு கிடைத்த வெற்றி மக்களின் வெற்றி. ஐக்கிய ஜனநாயக முன்னணி வலிமையாக இருக்கக் கூடிய இடங்களிலும் கடுமையான போட்டி இருந்தது. 6 மாநகராட்சிகளில் 5-ல் வெற்றி பெற்றிருக்கிறோம். கேரளாவில் மக்களை பிளவுபடுத்த சில சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்துவிட்டன. இந்த சக்திகளை கேரளா மக்கள் நிராகரித்துவிட்டனர்.
கேரளாவில் பாஜகவுக்கு இடமே இல்லை என்பதையே உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்திவிட்டன. புயல், மழை வெள்ளம், கொரோனா பாதிப்பு என அனைத்து சூழ்நிலைகளிலும் மாநில அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். இதற்காகவே மக்கள், இடதுமுன்னணிக்கு வாக்களித்துள்ளனர்.
இடதுசாரி அரசு தொடர வேண்டும் என்பதை மக்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. பாஜகவும், காங்கிரஸ் கூட்டணியும் சேர்ந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு விரோதமான பிரச்சாரத்தை முன்னெடுத்தன. இனிமேல் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆட்சியில் இருந்த எந்த மாநில அரசும் நாங்கள் சந்தித்தது போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்திருக்க முடியாது. ஒக்கி புயல், வெள்ளம், நிபா வைரஸ், கரோனா எனப் பல சவால்களைச் சந்தித்தோம். கேரள அரசு செய்த பணிகள், முயற்சிகளை மக்கள் புரிந்துகொண்டு தேர்தலில் வாக்களித்துள்ளனர்” என்று பினராயி விஜயன் கூறி உள்ளார்.
தங்கக் கடத்தல் விவகாரம், மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணைகளை கடந்து, கேரள உள்ளாட்சித் தேர்தலில் பினராயி விஜயனின் இடதுசாரி முன்னிலை கூட்டணிக்கு கிடைத்த அமோக வெற்றிக்கு முக்கிய காரணமாக கருதப்படுவது, ஆளும் அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் மீது முதல்வர் கவனம் செலுத்தியதும்,
குறிப்பாக ஏழைகளுக்கு வீடு உள்ளிட்ட நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேர்ந்ததும் காரணமாக அமைந்துள்ளது. அதேபோல், முழுமையான மதச்சார்பின்மையை கடைபிடித்ததும், மார்க்சிஸ்டின் வெற்றிக்கான ரகசியமாக அறியப்படுகிறது.
வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்