மருத்துவர் கஃபீல்கானை விடுதலை செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, உத்தரப்பிரதேச அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ஏராளமான குழந்தைகள் மரணம் அடைந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது தனது சொந்த முயற்சியில் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்து பல குழந்தைகளின் உயிரை காத்தவர் மருத்துவர் கஃபீல்கான். அப்போது கஃபீல்கான் மீதே குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பிறகு வெளியே வந்தார்.

அதன்பிறகு, கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடும் வகையில் மருத்துவர் கஃபீல்கான் பேசியதாகக் குற்றம் சாட்டி, அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரா சிறையில் அடைத்தது யோகி ஆதித்யநாத் அரசு.

[su_image_carousel source=”media: 20318,20319″ crop=”none” columns=”2″ captions=”yes” autoplay=”3″]

இதை எதிர்த்து கஃபீல்கான் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். தன்னை விடுவிக்க கோரிய மருத்துவர் கஃபீல்கானின் மனு மீதான விசாரணையின் போது, இதுகுறித்து 15 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அலகாபாத் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.

இதனையடுத்து அலகாபாத் நீதிமன்றம் மருத்துவர் கஃபீல்கானை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் அவரை தடுப்புக் காவலில் வைத்திருப்பது சட்ட விரோதம் எனக் கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றம் அவருடைய உரை அலிகார் நகரத்தின் அமைதியை அச்சுறுத்தவில்லை எனவும் குறிப்பிட்டது.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் அரசு, கஃபீல்கானின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பு நியாயமானது, அதில் நாங்கள் தலையிட மாட்டோம் என அறிவித்து உத்தரப்பிரதேச அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு குறித்து மருத்துவர் கஃபீல்கான், உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு நான் நன்றியைத் தெரிவிக்கிறேன். நான் யாருக்கும் எங்கும் அநீதி நடந்தாலும் தொடர்ந்து குரல் எழுப்புவேன் எனத் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்ட நகல்களைக் கிழித்து எறிந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்