சிபிஎஸ்இ பாடத்திட்டங்களில் இருந்து கூட்டாட்சி, குடியுரிமை, மதச்சார்பின்மை உள்ளிட்ட முக்கியமான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதால் பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் எழுந்துள்ளன.
கொரோனா தாக்குதல் காரணமாக நாடெங்கும் உள்ள அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் அனைத்து மாநில மற்றும் மத்திய கல்வித் துறைகளான சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தின் கீழ் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் 30% வரை குறைக்கப்பட்டுள்ளன.
இதில் 11 ஆம் வகுப்புக்கான பொலிடிகல் சயின்ஸ் பாடத் திட்டத்தில் கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய நான்கு பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில் உள்ளாட்சி என்னும் பிரிவில் இரு அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. அவை உள்ளாட்சி அமைப்புக்கள் குறித்த விளக்கம் மற்றும் இந்தியாவில் உள்ளாட்சி வளர்ச்சி ஆகியவை ஆகும்.
இதேபோல் 12 ஆம் வகுப்புக்கான பொலிடிகல் சயின்ஸ் பாடத் திட்டத்தில் நவீன உலகில் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள், இந்தியாவின் சமூக மற்றும் சமுதாய நிகழ்வுகள் மற்றும் மாநில விருப்பங்கள் ஆகியவை முழுவதுமாக நீக்கபட்ட்ள்ளன.
மேலும் வாசிக்க: சிபிஎஸ்இ 9 முதல் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் 30% குறைப்பு.. அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
இந்திய வெளியுறவுக் கொள்கை என்னும் பிரிவில் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் மியான்மருடன் இந்திய உறவு என்னும் அத்தியாயம் நீக்கப்பட்டுள்ளன.
இதைப் போல் 9 ஆம் மற்றும் 10 ஆம் வகுப்பு பாடத்திட்டங்களில் இருந்தும் பல முக்கிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுபோன்று முக்கியமான பாடங்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனக் குரல்கள் எழுப்பியுள்ளனர்.