பல லட்சம் மதிப்புள்ள கோக்கைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மேற்கு வங்க மாநில பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி விமான பணிப்பெண்ணாக பணியாற்றியவர். டெலிவிஷன் தொடரிலும் நடித்து வந்தார். இவர் 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
சமீப காலமாக பமீலா கோஸ்வாமி தனது நண்பர் பிரபீர் குமார் டே என்பவருடன் சேர்ந்து கோக்கைன் போதைப்பொருள் கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்காளத்தின் தெற்கு கொல்கத்தா நகரில் நியூ அலிப்பூர் பகுதியில் பாஜகவின் இளைஞரணி பொதுச் செயலாளர் பமீலா கோஸ்வாமி காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அவருடன் அவரது நண்பர் பிரபீர் குமார் டே என்பவரும் சென்றுள்ளார்.
அங்கு பமீலா கோஸ்வாமி காரை நிறுத்தி சோதனை செய்த காவல்துறையினர், 100 கிராம் எடையுள்ள ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோக்கைன் போதைப்பொருளை பமீலா கோஸ்வாமியின் கைப்பையில் இருந்து பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பமீலா கோஸ்வாமி (23), அவரது நண்பர் பிரபீர் குமார் டே (38), சோம்நாத் சாட்டர்ஜி (26) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து தெற்கு கொல்கத்தா மண்டல துணை ஆணையர் கூறுகையில், “ரகசிய தகவல்கள் அடிப்படையில், நியூ அலிபூர் காவல் நிலையம் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. அப்போது WB-06P-0233, என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்ட ஹோண்டா காரில் வந்த பமீலா கோஸ்வாமிடமிருந்து சட்டவிரோதமான போதைப் பொருளை பறிமுதல் செய்தோம்.
இந்த போதைமருந்து எங்கு வாங்கப்பட்டது? யாருக்கும் கொடுக்கப்பட உள்ளது? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?” என்பது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தார்.
கைதான பமீலா கோஸ்வாமி உள்ளிட்டோர் மீது என்டிபிஎஸ் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருளுடன் பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளது மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திஷா ரவி வழக்கில் டெல்லி காவல்துறைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்