இந்தியாவில் கரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று மட்டும் 110 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இதனால் 873767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 43288 ஐ தொட்டுள்ளது . இந்தியாவில் தற்போது வரை 1637 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கையை  எடுத்து வருகின்றன. கடந்த மார்ச் 24 முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவது தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் மார்ச் 15ல் டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் இருக்கும் தக்லிப் ஜமாத் நடத்திய மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்று அங்கு தங்கியிருந்த பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே தக்லிப் ஜமாத்தில் நடந்த விஷயத்தையும், கொரோனா தொற்று பரவலையும் தொடர்புபடுத்தி கரோனா வைரஸ் பரவலுக்கு குறிப்பிட்ட சமூகத்தினர் தான் காரணம் என்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஷமப் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர். இது தொடர்பாக தக்லிம் ஜமாத் சார்பில் மவுலானாவும் விளக்கம் தந்திருந்தார். மேலும் தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லாவும் வன்மையாக கண்டித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி சிவராத்திரி கொண்டாட்டத்தை கோவை ஈஷா மையத்தில் நடத்தினார் ஜக்கிவாசுதேவ். அதில் கரோனா தொற்றைப் பற்றிக் கவலைப்படாமல், குறிப்பிட்ட வைரஸ் தொற்று ஏற்படுத்தும் பாதிப்பை உணராமல் வெளிநாட்டினரை அழைத்து நிகழ்ச்சியை நடையுள்ளதும் ஏன் என சமூக ஆர்வலர்கள் விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

இதுதொடர்பாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியதற்கு, வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அவர்களும் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.

தற்போது இதற்கு ஈஷா மையம் விளக்கம் அளித்துள்ளது. அதில் “கோவை ஈஷா யோகா மையத்தில் கரோனா பாதித்த நபர் ஒருவர்கூட இல்லை, வெளிநாட்டினர் 150 பேர் உள்ளார்கள், அனைவரிடமும் சோதனை நடத்தப்பட்டது. இதை மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது என தெரிவித்துள்ளது.

ஈஷாவுக்கு வந்த மற்ற வெளிநாட்டினர்கள் கட்டாயம் 28 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. கட்டாய மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்ரீதியான இடைவெளி நெறிமுறைகளை தற்போது வரை ஈஷா பின்பற்றி வருகிறது.

ஈஷா மையத்தில் தங்கி பாதுகாப்பு பணி, தூய்மை பணி மற்றும் பிற களப் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் 2 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாக்கி உள்ளோம். எனவே, இதுதொடர்பாக, ஆதாரமின்றி வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மாநில சுகாதாரத்துறை மருத்துவ பரிசோதனையில் வெளிப்படைதன்மை இல்லை என்ற குற்றசாட்டும் எழுந்துள்ளது.

இப்போது கூட்டத்தைக் கூட்டி கரோனாவை பரப்பிய விவகாரத்தில் நிஜாமுதின் தாபிலிக் ஜமாத் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ள நிலையில், ஏன் ஈஷா மீதோ, பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பின்போது கூட்டத்தைக் கூட்டிய அமைப்புகள், கட்சிகள் மீதோ எடுக்கப்படுவதில்லை எனக் கேள்வி எழுப்பப்படுகிறது.

இந்த விவகாரத்தில் ஈஷா யோகா மையம் மட்டுமல்ல, நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த பின்னரும் கூட்டங்கள், ராமர் கோவில் கட்டுவதற்கான ஆரம்ப பூஜை விழாக்கள், நடத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் நிஜாமுதனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மத ரீதியான அமைப்பின் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதுதான் அதிர்வலைகளைக் கிளப்பி வருகிறது.