காபூல் வெடிகுண்டு சம்பவத்தை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நாங்கள் வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடுமையாக பேசியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதையடுத்து, தலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆப்கானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதையடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் மற்றும் ஆப்கான் மக்கள் என ஆயிரக்கணக்கானோர் நாட்டில் இருந்து வெளியேற காபூல் விமான நிலையம் முன்பு குவிந்தனர்.
காபூல் நகரம் தலிபான்களின் வசமான பிறகு 10 நாளில் சுமார் ஒரு லட்சம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்நிலையில், அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தால் ஆகஸ்ட் 31-க்குள் அனைத்து அமெரிக்கர்களும் தாயகத்திற்கு மீட்கப்படுவார்கள் என அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.
இதனையடுத்து, கடந்த 15 நாளுக்கும் மேலாக மீட்புப் பணியை அமெரிக்க அரசு துரிதப்படுத்தியது. இதுதொடர்பாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில், காபூலில் இருந்து இதுவரை 1,09,200 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை வெளியேற்றும் பணியில் அமெரிக்க ராணுவ படை ஈடுபட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம். எனவே அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. விமான நிலையத்திற்கு வெளியே உள்ள மக்கள் அப்பகுதியை காலி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
அந்த எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே காபூல் விமான நிலையம் முன்பு இருமுறை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், காபூல் விமான நிலைய குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 103 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 90 பேர், அமெரிக்கப் படைவீரர்கள் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
[su_image_carousel source=”media: 25956,25955″ crop=”none” captions=”yes” autoplay=”2″ image_size=”full”]
குண்டு வெடிப்பு தாக்குதல் அமெரிக்க படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதலுக்கு இந்தியா, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் தலிபான் தரப்பு, இதுவொரு தற்கொலைப் படைத் தாக்குதலாக இருக்கும் என்று சந்தேகிக்கிறது.
இதனிடையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேசும்போது, “நாங்கள் இந்த சம்பவத்தை மறக்க மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நாங்கள் வேட்டையாடுவோம். இதற்கு அவர்கள் தகுந்த விலையை கொடுத்தாக வேண்டும்” என்று கடுமையாக பேசியுள்ளார்.
இதையடுத்து அமெரிக்க தூதரகம் சார்பில் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம். எனவே காபூல் விமான நிலையத்தில் அபே நுழைவு வாயில், கிழக்கு, வடக்கு அல்லது புதிய அமைச்சக நுழைவு வாயில் ஆகியவற்றில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.
நாங்கள் அமெரிக்க குடிமக்களுக்கு காபூல் விமான நிலையத்தை நோக்கிசெல்வதையும், விமான நிலைய நுழைவு வாயிலில் குவிய வேண்டாம் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.
காபூல் விமான நிலைய வெடிகுண்டு தாக்குதல்: ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு; பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு