தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள் இனி “இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்” என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இலங்கை அகதிகள் முகாம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் அல்ல. அவர்களுக்கு துணையாக நாங்கள் இருக்கிறோம். அந்த உணர்வோடு இலங்கை அகதிகள் முகாம் இனி “இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்” என அழைக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 27 சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:

“1983 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 3,4,269 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாகத் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்களில், 18,944 குடும்பங்களைச் சேர்ந்த 58,822 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமிழ்நாட்டில் 29 மாவட்டங்களில் அமைந்துள்ள 2 சிறப்பு முகாம்கள் உட்பட 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 13,540 குடும்பங்களைச் சேர்ந்த 34,087 நபர்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்து வெளிப்பதிவில் வசித்து வருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக அகதிகளாக முறையான அடிப்படை வசதியின்றி வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு இனி பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதை இந்த அரசு உதவி செய்யும். இதற்காக அவர்கள் தங்கியிருக்கும் முகாம்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வுகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழர் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் 7,469 வீடுகள், 231 கோடியே 34 லட்ச ரூபாய் செலவில் புதிதாகக் கட்டித் தரப்படும். இதில், முதல் கட்டமாக 3,510 புதிய வீடுகள் கட்டுவதற்கு நடப்பு நிதியாண்டில் 108 கோடியே 81 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

முகாம்களில் உள்ள மின்வசதி, கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை மேம்படுத்திட 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இது தவிர, ஆண்டுதோறும், இதுபோன்ற வசதிகளைச் செய்துதர ஏதுவாக, இலங்கைத் தமிழர் வாழ்க்கை தர மேம்பாட்டு நிதியாக 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி வழங்கப்படும். விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகளின் கல்வி மேம்பட, வாழ்வு சிறக்க பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:

பொறியியல் படிப்பு படிக்கத் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு அனைத்து விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.

மேலும் வேளாண், வேளாண் பொறியியல் பட்டப்படிப்பிலும், மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு அனைத்து விடுதிக் கட்டணம், கல்விக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும்.

முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் அனைத்து முகாம் வாழ் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் கல்வி மற்றும் விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்கும். இதற்காக ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களில் ஆண்டு ஒன்றுக்கு தோராயமாக, 750 மாணவர்கள் அரசு மற்றும் பிற கல்லூரிகளில் கலை, அறிவியல், மற்றும் பட்டயம் உள்ளிட்ட தொழில் படிப்புகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கான கல்வி உதவித்தொகை போதுமானதாக இல்லை என அறியப்பட்டுள்ளது.

இவர்களுக்கு பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.2,500, இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ரூ.3,000, இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு ரூ.5,000 என, கல்வி உதவித்தொகையாக ஏற்கெனவே வழங்கப்பட்டு வருகிறது.

இனி, பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.10,000, இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு ரூ.12,000, இளநிலை தொழில் சார்ந்த படிப்புகளுக்கு ரூ.20,000 என உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.1 கோடியே 25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்” என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர் உள்ளிட்டோர் மீதுள்ள வழக்குகளை விரைவாக முடிக்க காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதா- தமிழ்நாடு அரசு