வெளிநாட்டு ஊழியர்களுக்கு க்ரீன் கார்ட் மற்றும் H1B, H2B உள்ளிட்ட விசா வழங்குவதற்கான தடையை இந்த ஆண்டு இறுதி வரை நீட்டித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால் ட்ரம்ப்.

கொரோனாவால் பல நாடுகளிலும் வரலாறு காணாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை நிலவுகிறது. அமெரிக்காவிலும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டுமென சில போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதமாக அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக வெளிநாட்டினருக்கான வாய்ப்புகளை குறைத்துவிட்டு உள்நாட்டு மக்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வழங்கப்பட்டு வரும் H1B விசாக்களை நடப்பாண்டின் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

ட்ரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியர்கள் போன்ற வெளிநாட்டு ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் நிலைக்கு தள்ளப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு கூகுள் CEO சுந்தர் பிச்சை அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், “அமெரிக்க பொருளாதாரம் உலகளவில் சிறந்து விளங்குவதற்கு வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் பங்களிப்பு அதிகம்.

அப்படி வெளிநாடுகளில் இருந்து வேலைக்கு வரும் வெளிநாட்டினரைத் தடுக்கும் வகையில் விசாக்களை நிறுத்தி வைத்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கு என் அதிருப்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு என் ஆதரவு தொடரும். அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.