பள்ளி மாணவிகளை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மதபோதகர் உட்பட 16 பாலியல் புரோக்கர்களுக்கு கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் நேற்று தண்டனை விவரங்களை அறிவித்தது. மதபோதகருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
 
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த 13 மற்றும் 14 வயதிலான இரு பள்ளி மாணவிகள் கடந்த 2014 ஜூன் மாதம் காணாமல் போயினர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து தேடிவந்தனர்.
 
இந்நிலையில் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் தொழில் கும்பலின் பிடியிலிருந்து தப்பி அந்த சிறுமிகள் வீடு திரும்பினர். அவர்கள் தாங்கள் எவ்வாறு கடத்தப்பட்டு மிரட்டி சித்ரவதை செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டோம் என்று அழுதபடி கூறினர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
அவர்களிடம் திட்டக்குடி போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமிகள் இருவரையும், திட்டக்குடி பகுதியில் வசிக்கும் மதபோதகர் அருள்தாஸ், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக தெரியவந்தது.
 
இதேபோல் திட்டக்குடியை சேர்ந்த தனலட்சுமி, விருத்தாசலம் கலா, வடலூர் சதீஷ்குமார், நெல்லிக்குப்பம் ராதா, கோலியனூர் கூட்ரோடு பாத்திமா, சேலம் அன்பு ஆகியோர் இந்த மாணவிகளை விடுதியில் தங்க வைத்து மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.
 
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஏடிஎஸ்பி லாவண்யா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் 366 ஏ(பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தும் எண்ணத்தோடு கடத்துதல்), 372 (பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்தல்), 342 (சட்ட விரோதமாக அடைத்து வைத்தல்), போக்சோ சட்டம் (சிறுமிகளை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கில் தொடர்புடைய வடலூர் சதீஷ்குமார், அவரது மனைவி தமிழரசி, ஜெமிளா, கபிலன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். 2 பேர் இறந்து விட்டனர். இதர 17 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
 
கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் இவ்வழக்கில் 16 பேரை குற்றவாளிகள் என கடந்த 4ம் தேதி அறிவித்தார்.
 
வடலூரை சேர்ந்த மகா என்கிற மகாலட்சுமியை விடுவித்தார். தண்டனை விவரம் 7ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி தண்டனை விவரத்தை அறிவித்தார். தீர்ப்பின் விவரம் வருமாறு:
 
விருத்தாசலம் நாச்சியார் பேட்டை மேகலா(எ) கலா(48), திட்டக்குடி பெரியார் நகர் தனலட்சுமி, ஊமங்கலம் காட்டுகூனங்குறிச்சி ஶ்ரீதர்(23),
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் பாத்திமா(35) ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ₹4 லட்சம் அபராதம், கட்ட தவறினால் மேலும் 3 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
 
திட்டக்குடி பெருமாள் கோயில்தெரு மதபோதகர் அருள்தாஸ் (60), போக்சோ சட்டத்தின் கீழ் 30 வருடம் சிறை தண்டனை, ₹5 லட்சம் அபராதம், கட்டத்தவறினால் 5 வருடம் சிறை,
 
நெல்லிக்குப்பம் சுல்தான்பேட்டை ராதா என்ற கிரிஜா(35),
வடலூர் ஆபத்தானபுரம் கவிதா என்ற ராஜலட்சுமி(34) ஆகியோருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 2பத்தாண்டுகள் கடுங்காவல், ₹10 ஆயிரம் அபராதம், கட்டத்தவறினால் 2 வருட சிறை.
 
விருத்தாசலம் ஜங்ஷன்ரோடு ஷர்மிளாபேகம்(34) போக்சோ சட்டத்தின் கீழ் 2 பத்தாண்டுகள் கடுங்காவல், ₹1000 அபராதம், கட்ட தவறினால் 2 ஆண்டுகள் சிறை.
 
சேலம் அயோத்தியாபட்டினம் அன்பழகன் (28), போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை, ₹3 லட்சம் அபராதம், கட்ட தவறினால் 3 வருட சிறை.
 
சேலம் அயோத்தியாபட்டினம் அமுதா(28), போக்சோ சட்டத்தின் கீழ் பத்தாண்டு கடுங்காவல், ₹10 ஆயிரம் அபராதம், கட்டத்தவறினால் 2 வருடம் சிறை.
 
திட்டக்குடி பெருமாள் கோயில் தெரு, மோகன் என்ற மோகன்ராஜ்(28), மதிவாணன்(23) ஆகியோருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை, ₹2 லட்சம் அபராதம், கட்ட தவறினால் தலா 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.
 
கடலூர் சிதம்பரம் ரோடு பூந்தோட்டம் அன்பு என்ற செல்வராஜ்(58) போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆயுள் தண்டனை, 30 ஆயிரம் அபராதம், கட்ட தவறினால் தலா 3 ஆண்டு சிறை.
 
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் டவர் என்ற ஆனந்தராஜ்(24), விருத்தாசலம் புதுப்பேட்டை பாலசுப்பிரமணியன்(42), ஆகியோருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 4 ஆயுள் தண்டனை, ₹4 லட்சம் அபராதம், கட்ட தவறினால் மூன்று வருடம் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
 
மேலும், தனித்தனி பிரிவுகளிலும் தண்டனை அளிக்கப்பட்டு அனைத்தையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
 
தீர்ப்பை கேட்டதும் தண்டனை பெற்றவர்களும், வெளியே இருந்த அவர்களது உறவினர்களும் கதறி அழுதனர்.
 
இந்த தீர்ப்பு குறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் செல்வபிரியா கூறுகையில், சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவது வெட்கப்பட வேண்டிய செயல் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
பாதிக்கப்பட்ட இரு சிறுமிகளுக்கும் தலா ₹5 லட்சம் நிவாரணமாக அபராத தொகையிலிருந்து வழங்க நீதிபதி லிங்கேஸ்வரன் உத்தரவிட்டார். ஏற்கனவே இடைக்கால நிவாரணமாக ₹2 லட்சமும், அரசு தரப்பிலிருந்து ₹50 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது என்றார் .
 
பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நிவாரணம் வழங்க நீதிபதி லிங்கேஸ்வரன் பரிந்துரைத்துள்ளார்.