நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷால் மற்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும், சிம்புவுக்கும் இடையே நீண்ட காலம் பிரச்சினை இருந்து வருகிறது. இப்படம் மூலமாக ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய உரிய பணம் தர வேண்டும் என சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் சங்கம் மூலமாக மைக்கேல் ராயப்பன் வலியுறுத்தி வந்தார். ஆனால் இதற்கு சிம்பு தரப்பு உடன்படவில்லை.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தனக்கு பேசிய பணம் வரவில்லை. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளன என குற்றம் சாட்டியுள்ளார் நடிகர் சிம்பு.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிம்பு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “தன்னுடைய பேருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படும் மைக்கேல் ராயப்பன் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும், தயாரிப்பாளர் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாகவும்” குற்றம் சாட்டி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படக்கரு: மதுரையை சேர்ந்த ஒரு ரவுடி காதலில் தோல்வி அடைந்து, துபாயில் பெரிய தாதாவாகி, பின்னர் சென்னையில் ஒரு நரைத்த தாத்தாவாகி ஒரு இளம்பெண்ணை காதலித்து அந்த காதலில் தோல்வி அடைந்து பழிவாங்க துடிக்கும் சைக்கோ ஆகிய கதைதான். இதில் சிம்புவில் மதுரை மைக்கேல் கதாபாத்திரம் அவரது ரசிகர்கள் வரவேற்பைப் பெற்றாலும் அஸ்வின் தாத்தா கதாபாத்திரம் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது. ஓல்ட் கெட்டப்பில் பறந்து பறந்து சண்டையிடும் சிம்புவை அனைவரும் வேடிக்கையாக பார்த்தனர்.