பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால், அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பணியாற்றிய பொன்.மாணிக்கவேல் கடந்த நவம்பர் மாதம் 29-ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், சிலை கடத்தல் வழக்குகளை தொடர்ந்து விசாரிக்க பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு அரசு நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
 
தீர்ப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பொன்.மாணிக்கவேல், தனக்கு அளித்த பதவியில் திறன்பட செயல்படுவேன் என்று அவர் தெரிவித்தார்.
 
மேலும் தமது குழுவில் உள்ள அதிகாரிகளை நகர்த்த அனுமத்திக்க மாட்டேன் என்று தெரிவித்த அவர், தமக்கு கொடுக்கப்பட்டுள்ள பொறுப்பை ஓராண்டுக்குள் நிறைவேற்றுவேன் என்று அவர் தெரிவித்தார்.
 
சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்றத்தின் பங்கு முக்கியமானது என்றும், கும்பகோணத்தில் தங்கி சிலைகடத்தல் வழக்குகளை சீக்கிரம் முடிப்பேன் என்று அவர் பேட்டியளித்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள 7 சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பொன்.மாணிக்கவேல், 36 வருடங்களுக்கு முன்பு உள்ள சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
 
எங்களது பணிகளை சாதாரணமாக பார்க்க வேண்டாம் என்றும் பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.
 
ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது ஆனாலும் அங்கேயும் பொன்.மாணிக்கவேல் நியமனம் சரி என்று உச்சநீதிமன்றமும் சொல்லியது
 
இந்நிலையில் சிலை கடத்தல் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக உடன் பணியாற்றிய உயர் அதிகாரிகள் தொடர்ந்து 3 முறை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
 
இந்த புகார் குறித்து விசாரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. இந்நிலையில் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு என தனி அலுவலகம் இல்லை. எங்களுக்கென தனியாக அலுவலகம் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பதாகவும், அதிகாரிகள் தனக்கு ஒத்துழைக்க மறுத்ததாகவும் சிறப்புஅதிகாரி பொன்மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார்.
 
புகாரை விசாரித்த உயர்நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவை மீறுவதாக தமிழக அரசுக்கும் கண்டனம் தெரிவித்தது. மேலும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்க மறுத்தால் இடைநீக்கம் செய்ய நேரிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.