லட்சத்தீவு விவகாரம் தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு லட்சத்துக்கும் குறைவான மக்கள் வசித்துவரும் லட்சத்தீவில், பெரும்பாலானவர்கள் மலையாள மொழி பேசும் இஸ்லாமியர்கள். கடந்த டிசம்பர் மாதம், லட்சத்தீவின் நிர்வாக அதிகாரியாக குஜராத்தைச் சேர்ந்த பிரஃபுல் கோடா படேல் என்பவரை நியமித்தது ஒன்றிய பாஜக அரசு.
பிரஃபுல் கோடா படேல் பதவியேற்ற நான்கே மாதங்களில் பல அதிரடிச் சட்டங்களைக் கொண்டு வந்தார். அதில் லட்சத்தீவு அல்லாத வெளிநபர்களுக்கு நிலத்தை விற்பது, குண்டர் சட்டம், மாட்டிறைச்சிக்குத் தடை, மதுவிலக்கு ரத்து என பிரஃபுல் படேல் கொண்டுவந்த மக்கள் விரோத சட்டங்களையும், பிரஃபுல் படேலையும் லட்சத்தீவிலிருந்து நீக்க வேண்டும்,
லட்சத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தையும், கலாச்சாரதையும் சிதைக்கும் வகையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக லட்சத்தீவைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குநருமான ஆயிஷா சுல்தானா அண்மையில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, “லட்சத்தீவில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படாத நிலையே இருந்தது. ஆனால் இப்போது தினந்தோறும் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர்.
பயோ ஆயுதங்கள் கொண்டு, ஒன்றிய அரசு லட்சத்தீவில் கொரோனா நோய்த் தொற்றைப் பரப்பி வருகிறது. பிரஃபுல் படேல் எடுத்த தவறான நடவடிக்கைகளின் விளைவுதான் இது” என்று பேசினார்.
மேலும் தனது கருத்துகள் நியாயமானவை, அந்த கருத்துகள் சரியானவை தான் என்றும் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் ஆயிஷா குறிப்பிட்டிருந்தார். இது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து லட்சத்தீவு குறித்து தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் ஆயிஷா சுல்தானா தவறான செய்திகளை பரப்பியதாக பாஜகவினர் குற்றம்சாட்டினார். ஆயிஷா பேசியது தேசத்துக்கு எதிரானது என பாஜகவின் லட்சத்தீவு பிரிவு தலைவர் அப்துல் காதர் ஹாஜி, கவரத்தி நகர் காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ஆயிஷா சுல்தானா மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ (தேசத்துரோகம்) மற்றும் 153 பி (வெறுப்பு பேச்சு) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது லட்சத்தீவின் கவரத்தி நகர் காவல்துறை.
லட்சத்தீவில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டங்களுக்கு எதிராக முதன்முதலாகக் குரல் எழுப்பியவர்களில் ஆயிஷா சுல்தானாவும் ஒருவர். தற்போது அவருக்கு எதிராக தேச துரோக வழக்கு பதியப்பட்டிருக்கும் நிலையில், லட்சத்தீவு மக்கள் உள்பட பலரும் ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் ஆயிஷாவுக்கு ஆதரவுகள் குவிந்துவரும் நிலையில், சமூக வலைதளங்களில் பாஜகவினர் பலரும் அவருக்கு எதிராக கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் கேரளத்தின், திருச்சூர் மாவட்ட பாஜகவிலிருந்தும் ஆயிஷாவுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்தீவு நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை தேவை; 93 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள் மோடிக்கு கடிதம்