தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறி 7,66,717 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், உத்தரவை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ.17,84,47,876 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 8,41,230 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 551பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். அதேபோல் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 4244 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,34,226லிருந்து 1,38,470 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து சேவைகள் அனைத்தையும் நிறுத்தியுள்ளது தமிழக அரசு. மேலும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளையும் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, அபராதமும் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 7,66,717 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்ததாக 6,30,662 பேரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து இதுவரை ரூ.17,84,47,876 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.