சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கில் தடைவிதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம் வழக்கை 22ஆம் தேதி ஜனவரி அன்று விசாரிக்க முடிவு செய்துள்ளது. இது சபரிமலைக்கு எல்லா வயது பெண்களுக்கும் அனுமதி கொடுக்க கூடாது என்று போராடும் பாஜக ,அர் எஸ் எஸ் உள்ளிட்ட இந்துத்வா அமைப்புக்கு பெரும் பின்னைடவாக கருதப்படுகிறது
 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதி அளித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
 
எனினும், 5 நீதிபதிகளில் பெண் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தார் .
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி பல்வேறு அமைப்புகள் கடந்த 9-ஆம் தேதி தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் அப்போதே தெரிவித்து விட்டது.
 
இந்த நிலையில், இந்த மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி எஸ்.கே.கெளல் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன் திங்கள்கிழமை பரிசீலனைக்கு வந்தன.
 
அப்போது மனு தாக்கல் செய்த அமைப்புகளில் ஒன்றான தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மேத்யூஸ் ஜே நெடும்பரா, இந்த வழக்கை அவசர வழக்காக கருதி தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரியும் , உடனே விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
 
அப்போது நீதிபதிகள் கூறுகையில், சபரிமலை தீர்ப்புக்கு எதிராக 19 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதான விசாரணை தேதியை இன்று முடிவு செய்வோம் என்று கூறினர்.
 
பின்னர் சபரிமலை விவகாரத்தில் அனைத்து சீராய்வு மனுக்கள் மீதும் நவம்பர் 13ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
 
அதன்படி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அத்தனை மனுக்களும் செவ்வாயன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் முன் அவரது சேம்பரில் விசாரிக்கப்பட்டது.
 
பின்னர் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் வழக்கை தலைமை நீதிபதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வின் கீழ் , ஜனவரி 22-ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்கப்பட்டாலும், ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பு நடைமுறையில் இருக்கும் என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
 
தடை கிடைக்காத சோகத்தில் மனு செய்தவர்கள் திரும்பி சென்றனர் ..