டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து கொண்டிருந்தபோது குடி போதையில் கார் ஓட்டுநர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் புகார் தெரிவித்துள்ளார்.

டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக இருப்பவர் ஸ்வாதி மலிவால். இவர் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அருகே பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பிறகு (19.01.2023) அதிகாலை 3 மணியளவில் ஸ்வாதி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2ஆவது கேட் நுழைவுவாயில் பகுதியில் தனது குழுவினருக்காக நின்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் காரில் வந்த நபர் ஒருவர், ஸ்வாதி மலிவாலை காரில் ஏறும்படி வற்புறுத்தியுள்ளார். அவரது நிலை மற்றும் தவறான நோக்கத்தை புரிந்துகொண்ட ஸ்வாதி மாலிவால் காரில் ஏற மறுத்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபர், ஸ்வாதி அருகே காரை நிறுத்தி, வேகமாக காரின் ஜன்னல் கண்ணாடி வழியாக ஸ்வாதியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். ஸ்வாதி டிரைவர் பிடியை விடுவிக்க முயற்சித்து அவரது கையை இழுத்துள்ளார். உடனே காரின் கண்னாடியை உயர்த்தியுள்ளார் அந்த டிரைவர்.

இதனால் ஸ்வாதி மாலிவாலின் கை சிக்கிக்கொண்டது. அப்படியே காரை ஓட்டிய நபர், சுமார் 15 மீட்டர் தூரம் ஸ்வாதி மாலிவாலை இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து ஸ்வாதி மலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. கடவுள்தான் என் உயிரைக் காப்பாற்றினார். டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவருக்கே பாதுகாப்பு இல்லை என்றால், மற்ற பெண்களின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்” என கவலையோடு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஸ்வாதி மலிவால் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் அந்தப் பகுதியில் கிடைத்த சிசிடிவி ஆதாரங்களை வைத்து கார் டிரைவரை கண்டுபிடித்துள்ளனர். அவர் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சந்திரா (வயது 47) என்பது தெரியவந்தது.

அந்த கார் டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 323 (தானாக முன்வந்து காயப்படுத்துதல்), 341 (தவறான நடத்தை), 354 (பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சக்தியைப் பிரயோகிப்பது), மற்றும் 509 (ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கம் கொண்ட செயல்) என இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அந்த கார் டிரைவரை பிப்ரவரி 2 ஆம் தேதி நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.