யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு இன்று (டிசம்பர் 11) முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
மத்திய தேர்வு ஆணையமான யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎல் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடைபெறும். இதில், தமிழக அரசு சார்பில் ஆட்சிப்பணித் தேர்விற்க்கான கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளை தமிழக அரசின் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு ஆன்லைன் விண்ணப்பம் இன்று (டிசம்பர் 11) முதல் தொடங்கி உள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பம் உடையவர்கள் பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் All India Civil Service Coaching Centre, Chennai-28 ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் விண்ணப்பிக்கும் தேதி- 11/12/2020 காலை 10 மணி முதல் 28/12/2020 மாலை 6 மணி.
நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்யும் தேதி: 18/01/2021
பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு: 24/01/2021 (ஞாயிற்றுக்கிழமை)
நுழைவுத்தேர்வு ஒரு மதிப்பெண் வினா அடிப்படையில் இருக்கும் (Objective type). 100 கேள்விகள் இந்திய வரலாறு மற்றும் சுதந்திரப் போராட்ட வரலாறு, இந்தியா மற்றும் உலக புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சிமுறை, பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம், பொது அறிவியல், சமகால நிகழ்வுகள், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சூழலியல் மற்றும் பல்லுயிர் குறித்த கேள்விகள் இருக்கும்.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டுத் தகுதியுடையவர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் 6 மாத காலம் இலவசத் தங்குமிடம், உணவுடன் பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சிக் காலத்தில் முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஆளுமைகள் மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சியை அளிப்பார்கள்.
விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு விடுதிக் கட்டணமும் உணவும் இலவசமாக வழங்கப்படும். பகுதிநேரப் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு விடுதி வசதிகள் அளிக்கப்படாது. ஆனால், பயிற்சி நேரத்தில் உணவுகள் இலவசமாக வழங்கப்படும். அனைத்துப் பயிற்சியாளர்கள் காப்புத் தொகையாக ரூ.3000/- செலுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள சிவில் தேர்வு எழுத ஆர்வமுள்ள வசதி குறைந்த மாணவர்கள், வெளிமாவட்ட மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிந்து சமவெளி நாகரிகத்தில் மாட்டிறைச்சியே மக்களின் விருப்ப உணவு; ஆய்வுத் தகவல்