பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதனை அதிமுக அரசு நிறைவேற்றும் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேச்சால் அதிமுக-பாஜக இடையே மோதல் வெடித்துள்ளது.
தமிழக பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் அதிமுக.விற்கு அட்வைஸ் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர் களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15-ம் தேதி ஏற்றப்போகிறாரா? அல்லது தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா” எனக் கூறியிருந்தார்.
இதற்கு அதிமுக தேசியக் கொடியை அவமதித்ததற்காகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காகவும் எஸ்.வி.சேகர் மீது, ஐபிசி 124 ஏ, 153 பி மற்றும் தேசிய மரியாதை அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971 இன் பிரிவு 2 இன் கீழ் பதிவு செய்ய புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், “எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். எடப்பாடி பழனிசாமி தான் என்றும் முதல்வர் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து அதிமுகவின் கருத்து அல்ல.
மேலும் எஸ்.வி.சேகருக்கு சிறைக்கு செல்ல ஆசையாக இருந்தால் அதனை அதிமுக அரசு நிறைவேற்றும். எஸ்.வி.சேகர் தேசியக் கொடியை அவமதித்து, முதல்வரை அவதூறாக பேசியதை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி இருவரின் மாறுபட்ட கருத்தால் கட்சியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் இ-பாஸ்க்கு லஞ்சம் வாங்கும் அதிமுக அரசு: உயர்நீதிமன்றம்