முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், வெளிநாடுகளில் வசிக்கும் உறவினர்களுடன் இருவரையும் பேச அனுமதித்தால், ராஜிவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிக்கும் என தெரிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி கிருபாகரன், நளினி மற்றும் முருகன் வெளிநாட்டில் உள்ள அவர்களது உறவினர்களிடம் முருகனின் தந்தை இறப்பு குறித்து தான் பேச போகிறார்களே தவிர அமெரிக்கா தேர்தல் தொடர்பாகவா பேச போகிறார்கள் என அதிருப்தி தெரிவித்தார். மேலும் குடும்பத்தினருடன் காணொளி மூலம் பேச அனுமதிப்பதில் என்ன பாதுகாப்பு குறை என்றும் கேள்வி எழுப்பினார்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக இருபது ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2015 ஆம் ஆண்டு வரை மட்டுமே அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதா? அல்லது விசாரணைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் வாசிக்க: ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் இ-பாஸ்க்கு லஞ்சம் வாங்கும் அதிமுக அரசு: உயர்நீதிமன்றம்