தமிழகம் உட்பட இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழி தெரிந்த பாதுகாப்பு வீரர்களை அதிக அளவில் பணியமர்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலர் ஒருவர் திமுக எம்.பி கனிமொழியிடம் இந்தியில் பேச, அதற்கு கனிமொழி இந்தி தெரியாது என்று கூறிய காரணத்தால், ‘நீங்கள் இந்தியரா’ என்று சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கேட்டது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கனிமொழிக்கு ஆதரவாக தேசிய அளவில் விவாதங்கள் எழுந்தது. தமிழக அரசியலில் மீண்டும் இந்தி எதிர்ப்பு பிரச்சாரம் தீவிரம் எடுக்க தொடங்கியது. திமுகவினர் மட்டுமின்றி திமுகவில் இருக்கும் கூட்டணி கட்சிகளும், தேசிய கட்சிகளும் கனிமொழிக்கு ஆதரவாக பேச தொடங்கினர்.

இது தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. தமிழர்களை போலவே அந்தந்த மாநில மக்களும் தங்கள் மொழி குறித்தும், இந்தி திணிப்பு குறித்தும் பேசத் தொடங்கினார்கள்.

இதன் விளைவாக தமிழகம் உட்பட இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் உள்ளூர் மொழி தெரிந்த பாதுகாப்பு வீரர்களை அதிக அளவில் பணியமர்த்த மத்திய தொழில் பாதுகாப்பு படை முடிவு செய்துள்ளது.

குறிப்பாக சென்னையில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை அதிக அளவில் நியமிக்க சிஐஎஸ்எஃப் முடிவு செய்துள்ளது. இருப்பினும் இது 100% நடைபெற வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளது.

முன்னதாக இதில் சர்ச்சைக்குள்ளான சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது இது தொடர்பாக விசாரணை நடத்தும் என்று தெரிவித்திருந்தது. மேலும் மொழி ரீதியாக யாருக்கும் எதிராக எங்கள் அதிகாரிகள் செயல்பட்டது கிடையாது. விரைவில் இதில் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று சிஐஎஸ்எஃப் கூறியுள்ளது.

மேலும் வாசிக்க: நீங்கள் இந்தியரா… திமுக எம்பி கனிமொழிக்கு விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்