எடப்பாடி பழனிசாமி சிறைக்குச் செல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை, அதிமுகவின் அழிவு பழனிசாமியால் தொடங்கிவிட்டது என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி விமர்சித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று போட்டியிட்ட 23 இடங்களில் 5 இடங்களில் வென்றது பாமக. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை.
பாமக மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அதிமுக 20 இடங்களில் கூட ஜெயித்திருக்காது என பாமகவின் இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி,யுமான அன்புமணி விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.
இதற்கு அதிமுகவின் செய்தித் தொடர்பாளரான பெங்களூரு புகழேந்தி கண்டனம் தெரிவித்து, பாமகவுக்கு 6 தொகுதிகளில் தான் செல்வாக்கு இருக்கிறது. ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால் தான் அன்புமணி, ராஜ்யசபா எம்.பி.யாகி இருக்கிறார் என பதிலடி கொடுத்தார். இதனால் அதிமுக- பாமக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னையில் 14-6-2021 நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், “அதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொன்டதாலும்,
கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் வா. புகழேந்தி (அதிமுக செய்தித் தொடர்பாளர், புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கூறுகையில், சர்வாதிகாரியாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி ஒரு நல்ல அரசியல் எதிரியை இனி சந்திக்க உள்ளார். அவர் சிறைக்குச் செல்லும் காலம் வெகு தொலைவில் இல்லை. உள்ளாட்சி தேர்தலுக்காக பாமகவின் ஆதரவை எதிர்பார்த்து என்னை நீக்கியுள்ளார்கள்.
சசிகலா ஆதரவில் இருந்து விலகிய பின் தொலைபேசியில் கூட நான் பேசியதில்லை. அதிமுகவில் இருந்து என்னை நீக்க பலமுறை முயற்சி செய்த எடப்பாடி பழனிச்சாமி தற்போது அதை செய்துள்ளார். இடிஅமீனின் குணங்களை எடப்பாடி பழனிச்சாமியிடம் பார்க்கிறேன்.
அதிமுகவை அசிங்கப்படுத்தியவருக்கு கண்டனம் கூறியது தவறா.. அதிமுகவின் அழிவு எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கிவிட்டது. கட்சியை கைக்குள் கொண்டு வந்து அனைவரையும் அடிமைப்படுத்த எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்கிறார்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சசிகலா உடன் போனில் பேசி அதை ஆடியோ ரிலீஸ் செய்ய வைத்த முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட 15 பேர் திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.