இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்கு போடப்பட்ட ஒப்பந்ததை தற்காலிகமாக ரத்து செய்வதாக பிரேசில் அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு கடந்த பிப்ரவரி மாதம் பிரேசில் அரசு அனுமதி வழங்கியது. அதன்படி,பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு தடுப்பூசிகளை வாங்கவும் பிரேசில் அரசு முடிவு செய்தது.

ஆனால்,பிரேசிலில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 500,000ஐ தாண்டியதாலும், பைசர் தடுப்பு மருந்துடன் ஒப்பிடுகையில் கோவாக்சின் விலை அதிகமாக இருப்பதாகவும் கருத்துகள் எழுந்தன. எனவே, தடுப்பூசி விவகாரத்தில் அதிபர் போல்சனாரோ ஊழல் செய்துவிட்டதாகவும்,

மேலும், அரசுக்கும் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் இடைத்தரகராக செயல்படும் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் என்ற நிறுவனம் இந்த தடுப்பூசி ஒப்பந்தம் மூலம் பெரும் லாபம் ஈட்டியுள்ளதாகவும் பிரேசில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.

ஆனால்,தடுப்பூசி விவகாரத்தில் எந்தவொரு முறைகேடு குறித்தும் தனக்குத் தெரியாது என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அதிபர் போல்சனாரோ மறுத்துள்ளார். எனினும், பிரேசில் அரசில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டியதால், இது தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவனம் கூறியதாவது, “பிரேசிலுக்கு கோவாக்சின் தடுப்பூசி விநியோகித்ததில் எவ்விதமான ஊழலும் நடக்கவில்லை. அத்தகைய புகார்களை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம்” என்று தெரிவித்தது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி கோவாக்சின் தடுப்பூசி மருந்தை 324 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், மேலும், இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தனது குழு விசாரிக்கும் என்றும் பிரேசில் சுகாதார அமைச்சர் மார்செலோ குயிரோகா தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசு- ட்விட்டர் இடையே வெடித்தது மோதல்; ட்விட்டர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு