கோவை அருகே பட்டியலின ஊராட்சி தலைவரை சாதி பெயரை சொல்லி திட்டி, கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜே.கிருஷ்ணாபுரம்,ஊராட்சி மன்றத் தலைவியாக இருப்பவர் சரிதா. உள்ளாட்சி தேர்தலில் வென்ற இவர், கோவை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் என்பதால் தம்மை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உட்கார விடாமல் பெயர்ப் பலகைகளில் ‘ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா’ என எழுத விடாமலும், அதே கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார் சரிதா.
மேலும், சம்பவம் தொடர்பாக சரிதா முகநூலில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவரது உயிருக்கே பாதுகாப்பு இல்லையா? என்று கண்டனக் குரல் எழுப்பி உள்ளார்.
கோவை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்!
இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா?
சரிதாவுக்கு பாதுகாப்பு தந்து, மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்!
— M.K.Stalin (@mkstalin) August 23, 2020
முன்னதாக சமீபத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாள் சுதந்திரத்தன்று தேசியக் கொடி ஏற்றவிடாமல் தடுத்த விவகாரம் சர்ச்சையானது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்து, ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் அம்மாள் தேசியக்கொடியை ஏற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க: கொரோனா மரணங்களில் 2வது இடத்தில் தமிழகம்; இன்று மட்டும் 97 பேர் பலி, 5,975 பேர் பாதிப்பு