அர்ஜுனா விருதைப் பெற வேண்டுமெனில், நான் இன்னும் எத்தனைப் பதக்கங்களை வெல்ல வேண்டுமென ஆதங்கத்துடன் மோடி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்க வீராங்கனை சாக்சி மாலிக்.

மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2017 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார்.

இந்நிலையில் 2020-ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறை விருதுகளான கேல் ரத்னா, அர்ஜூனா மற்றும் துரோனாச்சார்ய விருதுகளை கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. இதில் மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்குக்கு அர்ஜூனா விருது பரிந்துரைக்கப்பட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றதற்காக சாக்சிக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. அதேபோல் இந்தாண்டு தனக்கு அர்ஜூனா விருது கிடைக்கும் என சாக்சி மாலிக் எதிர்பார்த்து கிடைக்கவில்லை.

இதனையடுத்து பிரதமர் மோடிக்கும், விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூக்கு கடிதம் எழுதியுள்ளார் சாக்சி மாலிக். அக்கடிதத்தில், “ஒவ்வொரு விளையாட்டு நட்சத்திரத்திற்கும், அனைத்துவித விருதுகளையும் பெற வேண்டும் என்பதே லட்சியமாக இருக்கும்.

அதற்காகவே, அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து செயல்படுகிறார்கள். ஒருநாள் அர்ஜுனா விருதைப் பெற வேண்டுமென்பது எனது ஆசை.

இன்னும் என்னென்ன பதக்கங்கள் என் நாட்டுக்காக நான் வென்றால் எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கும்? அல்லது இந்த மல்யுத்த வாழ்க்கையில் எனக்கு இந்த விருதை வெல்லும் அதிர்ஷ்டமே இல்லையா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

2020ஆம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதுக்கு 29 பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்த நிலையில், ஏற்கனவே கேல் ரத்னா விருதை வென்ற மீராபாய் சானு மற்றும் சாக்சி மாலிக் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: தமிழக வீரர் மாரியப்பன், ரோஹித் சர்மா உள்பட 5 வீரர்களுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது