பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த 1998-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதைத் ஒட்டி இரு சாரார் இடையே போராட்டம் நடந்தது.
 
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் அரசுப் பேருந்து, காவல்துறை வாகனம் உள்ளிட்டவைகள் சேதம் அடைந்தன.  இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், பாலகிருஷ்ணா ரெட்டி அதிமுக சார்பில் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராக பதவி வகித்து வந்ததார்.  
 
இந்நிலையில் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரித்து வரும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், பாலகிருஷ்ணா ரெட்டி மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது.
 
வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.  இதனைத் தொடர்ந்து பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சர் பதவியை இழந்தார். 
 
இந்த நிலையில், இது தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு நகல் பேரவைச் செயலாளருக்கு கிடைத்தது.இதைத் தொடர்ந்து பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலி இடம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு கடிதம் மூலம் இதை சட்டப்பேரவைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 
 
இதையடுத்து ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் தற்போது செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதனால் சட்டமன்றத்தில் அதிமுகவில் இப்போது 114 எம்எல்ஏக்கள் உள்ளனர் இது பெருமான்மைக்கு 3 இடம் குறைவானதாகும் ..  திமுக உள்ளிட்ட  எதிர்கட்சிகள் எம்எல்ஏக்கள் 97  இடத்திலும் ஒரு சுயேச்சை எம்எல்ஏ வும் உள்ளனர்.    
 
ஓசூர் தொகுதியும் காலி இடம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் 21 தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
 
21 தொகுதிகளுக்கு (சட்டமன்ற இடத்தில் சுமார் 10% இடம்) தேர்தல் நடைபெற இருப்பதால் இது மினி சட்டமன்ற தேர்தல் போல இருக்கும் என அரசியல்  நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்