இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது. கொரோனா ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையில் தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. மேலும் கொரோனா மரணங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.

சுகாதாரத்துறை இன்று (ஆகஸ்ட் 23) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 5,975 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 3,79,385 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் மட்டும் 97 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 6,517 ஆக உயர்ந்துள்ளது.

இதில் சென்னையில் தான் அதிகபட்சமாக 19 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். சேலத்தில் 8 பேரும் தேனியில் 7 பேரும் கொரோனாவால் மரணித்தனர். வேலூரில் 6 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

மாவட்டங்களில் சென்னையில் அதிக அளவாக 1298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கோவையில் மிக அதிகமாக 392 பேருக்கும் கடலூரில் 380 பேருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், இன்று மட்டும் 6,047 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,19,327 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் வாசிக்க: இ-பாஸ் கட்டுப்பாடுகள் அவசியமில்லை- மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி