தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மேலும் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாட்டில் புதிதாகப் பிரிக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இந்த இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மேலும் 6 மாத அவகாசம் கோரப்பட்டுள்ளது.
ஏற்கனவே இருமுறை அவகாசம் கோரியிருந்த நிலையில் தற்போது 3வது முறையாக கூடுதல் கால அவகாசம் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள இந்த 9 மாவட்டங்களுக்கான வாக்காளர் பட்டியல் விவரங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் வெளியிட்டது.
இதனைத்தொடர்ந்து ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநிலத் தேர்தல் ஆணையம் வரும் 6 ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. இது தொடர்பாக, மாநிலத் தேர்தல் ஆணையம் இன்று (செப்டம்பர் 04) அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அனுப்பியுள்ள தகவலில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வரும் 6 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வானார் திமுக வேட்பாளர் மு.மு.அப்துல்லா