திமுகவின் மு.மு.அப்துல்லா, மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த அதிமுகவை சேர்ந்த ராணிப்பேட்டை முகமது ஜான் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி மரணம் அடைந்தார். அவரது பதவிக்காலம் 2025 ஜூலை 24 வரை இருந்ததால் அந்த இடத்துக்கு தமிழகத்தில் இருந்து வேறு ஒருவரை தேர்ந்தெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி செப்டம்பர் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும், போட்டி இருக்கும் பட்சத்தில் செப்டம்பர் 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் மு.மு.அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சுயேட்சையாக 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, திமுக வேட்பாளர் அப்துல்லா தவிர மற்ற மூவரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 234 எம்எல்ஏ.க்கள் உள்ள நிலையில் 118 எம்எல்ஏ.க்கள் ஓட்டு யாருக்கு கிடைக்கிறதோ அவர்கள் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியும்.

அந்த வகையில் திமுகவுக்கு மட்டும் மெஜாரிட்டியாக 125 எம்எல்ஏ.க்கள் உள்ளதால் திமுக வேட்பாளரே வெற்றி பெறுவார் என்ற நிலை இருந்தது. வேறு யாரும் களத்தில் இல்லாத நிலையில், திமுக வேட்பாளர் மு.மு.அப்துல்லா மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனை தமிழ்நாடு சட்டப்பேரவைச் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கி.சீனிவாசன் இன்று (செப்டம்பர் 03) அதிகாரபூர்வமாக அறிவித்தார். மு.மு.அப்துல்லா எம்பி ஆனதால் மாநிலங்களவையில் திமுகவின் பலம் 8 ஆக உயர்ந்துள்ளது. அப்துல்லா 2025 ஜூலை 24 வரை எம்பியாக செயல்படுவார்.

திமுக வெளிநாடுவாழ் இந்தியர் நல அணியின் இணைச் செயலாளரான மு.மு.அப்துல்லா (46) புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். 1993-ல் புதுக்கோட்டை நகர திமுக மாணவரணி துணை அமைப்பாளரான அப்துல்லா, நகர அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், சிறுபான்மையினர் அணி, தகவல்தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் என்று திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

முன்னதாக அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தியலிங்கம் ஆகிய 2 பேரும் எம்எல்ஏ.க்கள் ஆனதால் தங்களின் எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தனர். எனவே தமிழகத்தில் மாநிலங்களவைக்கு மேலும் இரண்டு இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதற்கான தேர்தல் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

13 மாதமாக சம்பளம் பாக்கி.. லதா ரஜினிகாந்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்