மாநிலங்கள் இடையே மற்றும் மாநிலத்துக்குள் தனிநபர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு இ-பாஸ் போன்ற எவ்விதத் தடையும் கூடாது என மாநில தலைமைச் செயலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சக செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் பொது போகுவரத்து நிறுத்தப்பட்டது. மாவட்டங்களுக்குள் மட்டும் தனிநபர்கள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு பயணிக்க இ-பாஸ் பெற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த பாஸ் பெற கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

இதனால் பொதுமக்கள், திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தமிழகத்தில் கடந்த 17 ஆம் தேதி முதல் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. ஆனால் போக்குவரத்துக்கு எந்த தளர்வும் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் எழுதிய கடிதத்தில் “நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 3 ஆம் கட்ட ஊரடங்கு தளர்வுகளின்படி, மாநிலங்கள் இடையே, மாநிலத்துக்குள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் விதிக்க கூடாது.

ஏனெனில் பொதுமக்கள் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. எனவே மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலை மீறும் வகையில் மாநில அரசுகள் இ-பாஸ் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: மாணவர்கள் தேர்வு கட்டணம் செலுத்தாவிட்டாலும் செமஸ்டர் முடிவுகளை வெளியிட வேண்டும்- உயர்நீதிமன்றம்