பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் இதுவரை 13 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த 20 ஆம் தேதி குடும்பத்துடன் லண்டனிலிருந்து தேனிக்கு வந்த 36 வயதான பொறியாளருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவர் தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது குடும்பத்தினரிடம் பரிசோதனை மேற்கொண்டதில் இருவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அந்த மூவருக்கும் உருமாறிய கொரோனா இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில், ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2 வாரங்களில் பிரிட்டனில் இருந்து தேனி மாவட்டத்திற்கு வந்த 17 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்குள் பிரிட்டனிலிருந்து மதுரைக்கு 80 பேர் திரும்பிய நிலையில், அவர்களில் 76 பேரை மட்டுமே கண்டறிய முடிந்தது. தொடர்புகொள்ள முடியாமல் இருந்த நான்கு பேரையும் காவல்துறை உதவியுடன் சுகாதாரத்துறையினர் தேடி வந்தனர்.

இவர்களில் இருவரை கண்டுபிடித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து தனிமைப்படுத்தியுள்ளனர். மேலும் இருவரை தேடும் பணி தொடர்கிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், “பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

உருமாறிய வைரஸ் பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை. அரசின் விதிமுறைகளை கடைப்பிடித்தால் பொதுமுடக்கம் கொண்டு வர அவசியமில்லை. பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் இதுவரை 13 பேருக்கும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 15 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதனையடுத்து உருமாறிய கொரோனா நிலவரம் குறித்து இன்று காலை மாவட்ட ஆட்சியர்களுடனும், மருத்துவ நிபுணர் குழுவினருடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி உறுதிமொழி