இந்தி திணிப்பிற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த சில நாட்களாக இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் டுவிட்டரில் சூசகமாக பதிவிட்டுள்ளார்.

கடந்த மே 31ஆம் தேதி, புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்த வரைவு அறிக்கை, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம், கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு சமர்பித்தது. அதில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. அதாவது இந்தி பேசாத மாநிலங்களிலும், இந்தி ஒருபாடமாக கட்டாயம் கற்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிர இந்தி எதிர்ப்பு மாநிலமாக இருக்கும் தமிழகம், அடுத்தக் கட்டப் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் #StopHindiImposition, #TNAgainstHindiImposition போன்ற ஹேஸ்டேக்குகள் டிரெண்டாகி வந்தனர்.

இதனையடுத்து மத்திய அரசு, திருத்தப்பட்ட வரைவு கல்விக் கொள்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயம் பயில வேண்டும் என்ற அம்சம் நீக்கப்பட்டு, 3வது மொழியை மாணவர்களே தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், “அழகிய தீர்வு… தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல… திருத்தப்பட்டது வரைவு” என்று குறிப்பிட்டிருந்தார். இதனைப் பாராட்டி, பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். மேலும், பஞ்சாபில் தமிழ் பரவுகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது “AUTONOMOUS” என்ற ஆங்கில வார்த்தையைக் குறிப்பிட்டு, அதற்கான விளக்கத்தை கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதியில் பார்க்குமாறு லிங்கை பதிவிட்டுள்ளார்.

அந்த வார்த்தைக்கான பொருள் ‘சுயாட்சி’, ‘தானாக முடிவெடுக்கும் ஆற்றல்’ உள்ளிட்டவை ஆகும். முன்னதாக இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது மாநில சுயாட்சி குறித்து பதிவிட்டுள்ளார். இதன்மூலம் மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தை கையில் எடுத்திருப்பது தெரிகிறது.

இதனை டுவிட்டர் போராளியாக மாறிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் என்ற வகையில், ஏராளமான கருத்துகளை பலரும் ஏ.ஆர்.ரஹ்மானை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.