நடிகர் விஜய் குறித்து கருத்து கூறி மெர்சல் படத்தைப் போல் சர்கார் படத்திற்கும் இலவசமாக புரமோஷன் செய்ய மாட்டோம் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள சர்கார் திரைப்படத்தின் இசை வெளியீடு அக்டோபர் 2ம் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய், அரசியல் கருத்துக்களை பேசினார். விஜய்யின் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளவுதராஜனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நடிகர்கள் தான் அரசியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதி நடிப்பதில்லை. இனி ஒருவர் வந்து முதலமைச்சர் எப்படி இருக்க வேண்டும் என முன்னுதாரணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

தற்போது நடிகர் விஜய் குறித்து கருத்து கூறி அவருடைய சர்கார் படத்தை ஓட வைக்க வேண்டுமா.. அதனால் விஜய்யின் அரசியல் பேச்சு குறித்து தான் கருத்து கூற விருப்பமில்லை” என பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளவுதராஜன் கூறியுள்ளார்.

இதற்கு முன் மெர்சல் படத்தை, பட தயாரிப்பாளர் செய்த புரமோஷனை விட பாஜகவினர், மெர்சலுக்கு எதிராக கூறிய கருத்துக்களால் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்து குறிப்பிடத்தக்கதது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லி இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளியன்று வெளியானது மெர்சல் திரைப்படம். இதில் மத்திய அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்யப்பட்டது.

படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி., மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களால் சர்ச்சை எழுந்தது. அதுதொடர்பான காட்சிகளை நீக்குமாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முதலில் கோரிக்கை வைத்தார். இவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக எம்.பி.,இல.கணேசன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் மெர்சலுக்கு எதிரான தங்களது கருத்துக்களை கடுமையாக வெளியிட்டனர். ஒருபடி மேலே சென்று விஜய்யின் மதத்தை குறித்தும் பாஜக.,வின் ஹெச் ராஜா விமர்சித்தார். இந்த செய்தி தேசிய ஊடகங்களிலும் பிரதிபலித்து, விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்துக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ள காட்சிகளை நீக்க வலியுறுத்தியும், ஜி.எஸ் டி வரி குறித்து தவறான விபரங்களை வெளியிட்டு பொதுமக்களிடம் குழப்பத்தை உருவாக்கி மத்திய அரசு மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் திரையிடப்பட்டுள்ள காட்சிகளையும் நீக்கிட கோரியும், இந்து மக்கள் கட்சியின் சார்பிலும் போராட்டம் நடைபெற்றது.

பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மெர்சலுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்ததால் அப்படம் தேசிய அளவில் பேசப்பட்டது. இதனால் அப்படம் ரிலிஸான ஒரு வாரத்திலேயே 170 கோடி ரூபாய் வரை குவித்துள்ளது.

இதற்கு சமூக வளைத்தலங்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மெர்சல் வெற்றிக்கு பாஜக-தான் காரணம் என்றும் பட புரமோஷனுக்கு பணம் வாங்கிக்கொள்ளாமல் பாஜக-வினர் வேலை பார்த்ததாகவும் குறிப்பிட்டிருந்தனர்.