மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜனவரி 17-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த சில வாரங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதையொட்டி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 848 காளைகளும், 1400 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்திருந்தனர்.
 
இதைத்தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை முதலே அலங்காநல்லூருக்கு காளைகள் கொண்டு வரப்பட்டன.
 
மேலும் மாடுபிடி வீரர்களும் அங்குள்ள வாடிவாசல் பகுதியில் திரண்டனர். காலை 7 மணிக்கு அலங்காநல்லூர் முனியாண்டி கோயில் காளை வாடிவாசலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டதும் அது அவிழ்த்து விடப்பட்டது.
 
அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க முயன்ற 40 பேர் காயமடைந்தனர்.
 
வாடி வாசல் வழியாக காளைகள் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன. மாடு பிடி வீரர்கள் 100 பேர் கொண்ட குழுவாக களமிறக்கப்பட்டனர். வாடிவாசல் வழியாக சீறி வந்த காளைகளின் திமிலைப்பற்றி வீரர்கள் அடக்கினர்.
 
இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், மாணிக்கம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம், வீர விளையாட்டுப் பேரவைத் தலைவர் ராஜசேகரன் ஆகியோரின் காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.
 
இதில் பல காளைகள் அவர்களிடம் சிக்காமல் களத்தை சுற்றி வந்து வீரர்களை கொம்பால் தூக்கி வீசின. ஜல்லிக்கட்டில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ஒத்தக்கொம்பன், செவலை கொம்பன், வெள்ளை கொம்பன் ஆகிய 3 காளைகளும் அடுத்தடுத்து வாடிவாசல் வழியாக விடப்பட்டன.

 

மேலும் மூன்று காளைகளையும் பிடித்தால் ஏராளமான பரிசுகளும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் 3 காளைகளும் வீரர்களை நெருங்க விடாமல் சீறிப்பாய்ந்து சென்றன.