இந்திய துறைமுக மசோதா 2020 குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்திய துறைமுகங்கள் சட்டம், 1908க்கு மாற்றாக தயாரிக்கப்பட்ட இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்திய கடலோரப் பகுதிகளை அதிகம் பயன்படுத்துவதற்காக, துறைமுகத் துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், துறைமுகங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்தவும் இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா துறைமுகங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவும், செயல்படாத நிலையில் உள்ள துறைமுகங்களை மீண்டும் பயன்படுத்தவும் வழி செய்யும். கடல்சார் துறையில் அதிக முதலீட்டையும், புதிய துறைமுகங்கள் உருவாகவும், தற்போதுள்ள துறைமுகங்களின் மேம்பாட்டையும் இந்த மசோதா உறுதி செய்யும்.
இந்த மசோதாவின் அம்சங்கள்: கடல்சார் துறைமுக ஒழுங்குமுறை ஆணையம் அமைத்தல்.
கடலோர மாநில அரசுகள், மாநில கடல்சார் வாரியங்கள் மற்றும் இதர கடல்சார் தரப்பினருடன் ஆலோசித்து தேசிய துறைமுகக் கொள்கை மற்றும் தேசிய துறைமுகத் திட்டம் உருவாக்கப்படும்.
கடல்சார் தொழில் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண, கடல்சார் துறைமுகத் தீர்ப்பாயம் மற்றும் கடல்சார் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அமைத்தல்.
இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள புது விதிகள், துறைமுகங்களின் பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு, தரமான செயல்பாடு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும்.
இந்திய கடல்சார் மற்றும் துறைமுகத் துறையில், பொதுத் துறை மற்றும் தனியார் முதலீடுகளை இந்த மசோதா அதிகரிக்கச் செய்யும்.
எளிதாக தொழில் செய்யும் சூழலை அதிகரித்து, மத்திய அரசின் தற்சார்பு இந்தியா நடவடிக்கைகளுக்கு இந்த மசோதா உந்துதல் அளிக்கும்.
இந்திய துறைமுக வரைவு மசோதா 2020 பொது மக்கள் ஆலோசனைக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு மசோதாவை http://shipmin.gov.in/sites/default/files/IPAbill.pdf என்ற இணைப்பில் காணலாம் என்றும் இந்த வரைவு மசோதா குறித்து, மக்கள் தங்கள் ஆலோசனைகளை sagar.mala@nic.in என்ற இ-மெயில் முகவரிக்கு, டிசம்பர் 24 ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் பாஜக தனது நாடகத்தை தொடங்கியுள்ளது- முதல்வர் மம்தா பானர்ஜி